வெளியிடப்பட்ட நேரம்: 10:34 (14/08/2018)

கடைசி தொடர்பு:10:34 (14/08/2018)

பெட்ரோலுக்கு நீல நிறம்; டீசலுக்கு ஆரஞ்சு நிறம் - வாகன விதிமுறைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி!

காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த, டெல்லியில் ஓடும் வாகனங்களை வகைப்படுத்தி, அதில் வண்ண ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும் என்ற கோரிக்கைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

வாகன விதிமுறை

டெல்லியில், காற்று மாசுபாடு உச்சத்தில் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர், அதிக காற்று மாசுபாட்டால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. அதற்கு, வாகனப் பயன்பாடே முக்கியக் காரணமாகக் கூறப்பட்டுவந்தது. இந்நிலையில், வாகனப் பயன்பாட்டைத் தடுக்க அவ்வப்போது டெல்லி அரசு பல்வேறு புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்திவருகிறது. முன்னதாக ஒரு இலக்க எண், இரண்டு இலக்க எண்கள் எனப் பிரித்து வாகனங்கள் இயக்கப்பட்டன. அப்போதும் காற்று மாசுபாட்டைத் தடுக்க முடியவில்லை. 

இதையடுத்து, தற்போது வாகனங்களை அவர்கள் நிரப்பியுள்ள எரிபொருள்மூலம் அடையாளப்படுத்தி, அதனடிப்படையில் காற்று மாசுபட்டைத் தடுக்க முடியும் என்ற மத்திய போக்குவரத்துத் துறையின் யோசனை உச்ச நீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயு வாகனங்களுக்கு முப்பரிமாண நீல நிற ஸ்டிக்கரும், டீசல் வாகனங்களுக்கு ஆரஞ்சு நிற ஸ்டிக்கரும், எலெக்ட்ரிக் மற்றும் இரட்டை எரிபொருள் வாகனங்களின் பெயர்ப்பலகை பச்சை நிறத்தில் மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விதிகள், வரும் செப்டம்பர் 30-ம் தேதி முதல் டெல்லியில் அமலுக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. 

வாகனங்களில் இந்த வண்ணக் குறியீடு இருப்பதன்மூலம், ஒரு நாளுக்குப் பயன்படுத்தப்படும் வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் எரிபொருள் அளவைக் குறைத்து, காற்று மாசுபடுவதைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசும் இந்தச் செயலுக்கு அனுமதி வழங்கியுள்ளது. மேலும், இதுபோன்ற அறிவியல் ரீதியான பல விசயங்களை டெல்லியில் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளது.