நீரவ் மோடி விவகாரம்..! பஞ்சாப் வங்கி முன்னாள் இயக்குநர் பணிநீக்கம்; சி.பி.ஐ விசாரிக்கவும் அனுமதி

தொழிலதிபர் நீரவ் மோடிக்கு வங்கிக் கடன் வழங்க உதவியாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட அலகாபாத் வங்கி தலைமைச் செயல் அதிகாரியாக (சி.இ.ஓ) இருந்த உஷா அனந்தசுப்ரமணியன் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். 

உஷா

மும்பையிலுள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளைமூலம் பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி 13,000 கோடி ரூபாய் கடனாகப் பெற்று மோசடியில் ஈடுபட்டார். அவர், தற்போது வெளிநாடு தப்பிச்சென்றுவிட்டார். அவர், வங்கியில் கடன் வாங்கிய காலமான 2015 ஆகஸ்ட் முதல் 2017 மே வரையிலான காலகட்டத்தில், பஞ்சாப் வங்கியின் நிர்வாக இயக்குநராக இருந்தவர் உஷா அனந்தசுப்ரமணியன். அதையடுத்து, அவர் அலகாபாத் வங்கியின் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றிவந்தார்.

நீரவ் மோடிக்கு 13,000 கோடி ரூபாய் கடன் வழங்கிய விவகாரம் தொடர்பாக, உஷா அனந்தசுப்ரமணியன் மீதும் குற்றச்சாட்டு எழுந்தது. அதையடுத்து அவர், கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் நிர்வாக இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகினார். ஆனால், அலகாபாத் வங்கி ஊழியராகவே பணியாற்றிவந்தார். இந்த நிலையில், நேற்றுடன் அவர் பணிக்காலம் நிறைவடைய இருந்த நிலையில், நேற்று அவரை பணி நீக்கம்செய்து மத்திய அரசு உத்தரவிட்டது. மேலும், உஷா அனந்தசுப்மணியன், பஞ்சாப் நேஷனல் வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குநர் சஞ்சீவ் சரண் ஆகியோருக்கு எதிராக சி.பி.ஐ விசாரணை நடத்தவும் மத்திய அரசு அனுமதித்துள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!