வெளியிடப்பட்ட நேரம்: 13:35 (14/08/2018)

கடைசி தொடர்பு:14:38 (14/08/2018)

ஜே.என்.யு மாணவிக்கு மாஃபியா கும்பல் பகிரங்க மிரட்டல்!

சமூக பிரச்னைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ஜே.என்.யு பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மாணவி, ஷெஹ்லா ரஷீத் ஷோராவுக்கு மிரட்டல் விடுத்த நபர்மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

மாணவர் ஷெஹ்லா ரஷீத் ஷோரா

Photo Credit -twitter/@Shehla_Rashid

நாட்டில் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் (ஜே.என்.யு) ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகமும் ஒன்று. இங்கு, சமீபகாலமாக மாணவர் போராட்டம் அதிகரித்துவருகிறது. ஜே.என்.யு வளாகத்தில் கடந்த 2016-ல் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தில், மாணவர் அமைப்பின் தலைவர் கண்ணையா குமார் மற்றும் உமர் காலித் மீது தேசத் துரோக வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தச் சூழ்நிலையில், டெல்லி லுட்யன்ஸ் பகுதியில் நேற்று ஜே.என்.யூ மாணவர் உமர் காலித் மீது மர்ம நபர் ஒருவர் நேற்று துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். 'அரசுக்கு எதிராக யார் பேசினாலும் அவர்கள் குறிவைத்து தாக்கப்படுகின்றனர்' என உமர் செய்தியாளர்களிடம் பேசினார். 

இந்த நிலையில், அகில இந்திய மாணவர் சங்கத்தின் உறுப்பினராக இருக்கும் மாணவி ஷெஹ்லா ரஷீத் ஷோராவுக்கு, மிரட்டல் விடும் தொனியில் குறுஞ்செய்தி ஒன்றை மாஃபியா கும்பலைச் சேர்ந்த ரவி பூஜரி என்பவரது பெயரில் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. அதில், `நீங்கள் பேசுவதை தவிர்த்து விடுங்கள்; இல்லையெனில், எப்போதும் பேச முடியாதபடி செய்துவிடுவோம். இதனை, உமர் காலித் மற்றும் ஜிக்னேஷ் மேவனியிடம் கூறிவிடு' எனக் குறிப்பிட்டு, `இப்படிக்கு மாஃபியா டான் ரவி பூஜரி' என அவரது பெயரை குறிப்பிட்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, போலீஸிடம் புகார் அளித்துள்ளார் ஷெஹ்லா ரஷீத் ஷோரா. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். 

மிரட்டல் செய்தியை ஸ்கீரின்ஸாட் எடுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ரஷித், 'இந்துத்துவ அடிப்படைவாதி ரவி பூஜாரி இந்த மெசேஜ் அனுப்பியுள்ளார். அவர், எனக்கு, உமர் காலித்துக்கு, ஜிக்னேஷ் மேவானிக்கு எச்சரிக்கைவிடுத்துள்ளார். டிஜிட்டல் இந்தியா மூலம்' என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, உமர் காலித் மீது தாக்குதல் நடத்திய மர்ப நபரைத் தேடும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ள போலீஸார், சந்தேகத்துக்கிடமாக செயல்பட்ட ஒருநபரை அடையாளம் கண்டுள்ளனர். சி.சி.டி.வி கேமராவில் பதிவான அந்த நபரின் புகைப்படத்தை போலீஸார் தற்போது வெளியிட்டுள்ளனர்.