வெளியிடப்பட்ட நேரம்: 13:10 (14/08/2018)

கடைசி தொடர்பு:13:10 (14/08/2018)

வங்கிகளைக் குறிவைத்த ஹேக்கர்கள்! - நொடிப்பொழுதில் திருடப்பட்ட ரூ.94 கோடி

புனேயில் உள்ள காஸ்மோ வங்கியின் சர்வரை ஹேக் செய்து, அதிலிருந்து ரூ.94 கோடி ரூபாய் திருடியுள்ளனர் இணையக் கொள்ளையர்கள்.

வங்கி கொள்ளை

காஸ்மோஸ் வங்கி இந்தியாவின் மிகப் பழைமையான கூட்டுறவு வங்கி. இது, 1906-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. மகாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள காஸ்மோஸ் வங்கியின் தலைமை அலுவலகத்தில் இணையச் சர்வரை ஹேக் செய்த சில இணையக் கொள்ளையர்கள் அதிலிருந்து ரூ.94 கோடியைக் கொள்ளையடித்துள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டில் இருந்து இந்தக் கொள்ளை நடத்தப்பட்டுள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக வங்கி மேலதிகாரிகள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். அதில், முதலில் ரூ.80.5 கோடி ரூபாய் வெளிநாட்டில் உள்ள வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டதாகவும் 14,849 ரூபாய் டெபிட் கார்டுக்கு மாற்றப்பட்டதாகவும், மேலும் 13.0 கோடி ரூபாய் உலகளாவிய நிதியியல் தொலைத் தொடர்புகள் சங்கத்துக்கு (Swift) மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தப் புகாரின் அடிப்படையில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் காவல் துறையினர் விசாரணைநடத்திவருகின்றனர்.