`வீடியோவைக் கொடுத்தால் நடிகையைப் பாதிக்கும்'- திலீப்பின் கோரிக்கையை நிராகரித்தது கேரள உயர்நீதிமன்றம்

கேரளாவில் நடிகை கடத்தப்பட்ட வழக்கில், வீடியோ ஆதாரத்தின் நகலைக் கேட்டு நடிகர் திலீப் தாக்கல் செய்த மனுவை கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

நடிகர் திலீப்

கேரள நடிகை கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தன் வீட்டிலிருந்து கொச்சிக்கு சென்றபோது ஒரு கும்பலால் காரில் கடத்திச் செல்லப்பட்டார். அவரை இரண்டு மணி நேரமாக காரில் வைத்து துன்புறுத்திய அந்தக் கும்பல் அதை வீடியோவாகவும் பதிவு செய்து வைத்துக்கொண்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீஸார், பல்சர் சுனில் உள்ளிட்ட 12 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். 

இந்த வழக்கில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் நடிகர் திலீப், கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 10-ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 85 நாள்கள் சிறைவாசத்துக்குப் பின்னர் அவருக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இந்த வழக்கில் திலீப்பின் முன்னாள் மனைவியான நடிகை மஞ்சு வாரியார் முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார். நடிகை கடத்தல் வழக்கின் விசாரணை அங்கமாலி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், வழக்கு தொடர்பான 700 ஆவணங்களின் நகல்கள் ஏற்கெனவே திலீப்பிடம் வழங்கப்பட்டு விட்டது. ஆனால், வழக்கின் முக்கிய ஆவணமாகக் கருதப்படும் வீடியோ ஆதாரத்தின் நகலை தனக்குக் கொடுக்க வேண்டும் என திலீப் தரப்பில், விசாரணை நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், மாஜிஸ்திரேட் நீதிமன்றம் வீடியோ ஆதாரத்தை வழங்க மறுத்துவிட்டது.

அதனால் கேரள உயர்நீதிமன்றத்தில் திலீப் தரப்பில் இதே கோரிக்கையை வலியுறுத்தி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அப்போது வாதிட்ட அரசுத் தரப்பு வழக்கறிஞர், ’வீடியோ ஆதாரத்தை கொடுத்தால் அது நடிகையின் தனிப்பட்ட சுதந்திரத்தைப் பாதிக்கும். அதனால் அவருக்கு வீடியோ நகலைக் கொடுக்கக்கூடாது’ என வலியுறுத்தினார். ஆனால், வழக்கின் அனைத்து ஆவணங்களும் தனக்கு கொடுக்கப்பட வேண்டும். அது தனது உரிமை என திலீப் தரப்பு வலியுறுத்தியது.

இரு தரப்பு வாதத்துக்குப் பின்னர் கேரள உயர்நீதிமன்றம் இன்று அளித்த தீர்ப்பில், திலீப்பின் கோரிக்கையை நிராகரித்ததோடு, வழக்கு விசாரணையைத் தாமதப்படுத்தும் வகையில் திலீப் சார்பாக இத்தகைய கோரிக்கை முன்வைக்கப்பட்டிருப்பதாகவும் கண்டனம் தெரிவித்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!