வெளியிடப்பட்ட நேரம்: 16:55 (14/08/2018)

கடைசி தொடர்பு:16:55 (14/08/2018)

`ரோல்மாடலான ராஜமாணிக்கம்' - நிவாரணப் பொருள்களை தோளில் சுமந்துசெல்லும் தமிழ் ஐ.ஏ.எஸ் அதிகாரி

மக்களுக்கான நிவாரணப் பொருள்களை சுமந்து சென்ற தமிழ் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் கேரள மக்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறார்கள்.

மனைவியுடன் ராஜமாணிக்கம்

கேரளாவில் பருவ மழை கொட்டித் தீர்த்ததால், கடந்த ஒரு வாரமாக கேரளா வெள்ளத்தில் மிதக்கிறது. இதனால் அம்மாநில மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிக் கிடக்கிறது. இடுக்கி, வயநாடு, மலப்புரம், கோழிக்கோடு, பாலக்காடு உள்ளிட்டப் பகுதிகள்தான் அதிகம் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. அதிலும் கேரளாவில் உள்ள 14 மாவட்டங்களில் 7 மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 39-க்கும் மேல் உயர்ந்துள்ளது.

இந்நிலையில், அம்மாநில முதல்வர் பினராயி விஜயன், `கேரளாவில் கடந்த 94 ஆண்டுகள் இல்லாத அளவுக்குக் கனமழை பெய்து பேரழிவை ஏற்படுத்தியிருப்பதாகவும், கனமழையால் 20,000-க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன என்றும், கிட்டத்தட்ட 10 ஆயிரம் கிலோ மீட்டர் அளவிலான சாலைகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. வெள்ளம் காரணமாக ரூ.8,316 கோடி மதிப்பிலாக சொத்துகள் சேதமடைந்துள்ளன. பேரழிவின் விளிம்பில் சிக்கித் தவிக்கும் கேரள மக்களுக்கு முதலமைச்சரின் நேரடி நிவாரண நிதியின் கீழ் நிதி வழங்கலாம்’ எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐஏஎஸ் அதிகாரி ராஜமாணிக்கம்

இதையடுத்து கேரளா மாநிலத்தில் நடக்கும் மீட்புப் பணிகள், வெள்ளம் சூழ்ந்த கேரளாவின் புகைப்படங்கள், வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அதில் கேரள மாநில உணவு பாதுகாப்புத்துறையின் ஆணையரும் ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான ராஜமாணிக்கம் மற்றும் உமேஷ் ஐ.ஏ.எஸ் ஆகியோர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொருள்களை தாங்களே தூக்கிச் செல்லும் புகைப்படங்கள், வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. மேலும், இரவு பகலாக அதிகாரிகள் பணியாற்றி வருவதாகக் கூறப்படுகிறது.

மதுரை மாவட்டம், திருவாதவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவர் மாநில உணவு பாதுகாப்புத்துறையின் ஆணையராக பணியாற்றுகிறார். இவர் திருச்சி மாவட்ட வேலைவாய்ப்புத் துறையில் பணியாற்றி உள்ளார். மேலும், கேரள மாநிலம், இடுக்கி, எர்ணாகுளம், திரிசூர் பகுதிகளில் பணியாற்றி உள்ளார். இவரின் மனைவியும் ஐ.பி.எஸ் அதிகாரியுமான நிஷாந்தினியும் தற்போது கேரள மாநிலத்தில் பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும், தமிழகத்தில் அரசுப் பள்ளியில், ஏழ்மையான குடும்பங்களில் பிறந்து படித்து முன்னேறியவர்கள்.

நிவாரணப் பணியில் ராஜமாணிக்கம்

மேலும், இருவரும் இயற்கை வேளாண்மையின் மீதான அக்கறையால் தாங்கள் பணியாற்றும் பகுதிகளில் உள்ள பள்ளிகள், அரசு அலுவலகங்களில் இயற்கை வேளாண்மை குறித்த விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகளைச் செய்து வருகிறார்கள். இதேபோல் சிறுவர் இல்லத்தில் அடைக்கப்பட்ட சிறார் குற்றவாளிகளின் அறிவை வளர்ப்பதற்காகப் புத்தகங்களை வழங்குவது போன்ற ஆக்கபூர்வப் பணிகளைச் செய்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், ராஜமாணிக்கத்தின் தந்தை படித்த திருவாதவூர் அரசுப் பள்ளியில் 25 லட்சம் மதிப்பிலான ‘ஸ்மார்ட்’ வகுப்புகள், தங்கள் கிராம இளைஞர்களை அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கு தயார்படுத்தும் இலவச பயிற்சி மையம் அமைத்துள்ளார்கள். அவ்வப்போது தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் தன்னார்வப் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு ஏழ்மையில் படித்து ஐ.ஏ.எஸ் அதிகாரியாக உயர்ந்ததைப்போல் மாணவர்கள் வளர வேண்டும் என பயிற்சி வகுப்புகள் எடுத்து வருகிறாராம்.

இந்த நிலையில், வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில், இரவு பகல் பாராமல், களப்பணி ஆற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரி ராஜமாணிக்கம், நிவாரணப் பொருள்களை லோடு மேன் இறக்கி வைத்துக்கொண்டிருக்க, சட்டென மூட்டையை தன் தோளில் தூக்கியவர், வேகமாக அதை நிவாரண முகாமில் அடுக்கினார். அதைப்பார்த்த உமேஷ் ஐ.ஏ.எஸ்ஸும்  மூட்டையை மினி லாரியில் இருந்து இறக்கினார். இதேபோல் கொட்டும் மழையில் களமிறங்கி பலரை மீட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், நிவாரணப் பொருள்களைக் கொண்டு வருபவர்களைப் பாராட்டி வாழ்த்து தெரிவிக்கிறாராம். அவருடன் பலர் செல்ஃபி எடுத்துக்கொண்டு செல்கிறார்கள். பலர் சமூக வலைதளங்களில் ராஜமாணிக்கத்தைப் பாராட்டி வருவதுடன், `இளைஞர்கள் அவர் எங்கள் ரோல்மாடல்' என மகிழ்ச்சியோடு பகிர்ந்து வருகிறார்கள்.

இரவு பகல் பாராமல், மீட்புப் பணிகளை உணர்வுபூர்வமாக செய்யும் ராஜமாணிக்கம் ஐ.ஏ.எஸ் அவர்களை நாமும் பாராட்டுவோம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க