`சரிக்கட்டிவிட்டீர்கள் மோடி ஜி’ - காங்கிரஸ் ட்வீட்டை தெறிக்கவிட்ட நெட்டிசன்கள் | congress tweets Modiji finally managed to do something that we couldn't do in 70 years

வெளியிடப்பட்ட நேரம்: 18:05 (14/08/2018)

கடைசி தொடர்பு:18:05 (14/08/2018)

`சரிக்கட்டிவிட்டீர்கள் மோடி ஜி’ - காங்கிரஸ் ட்வீட்டை தெறிக்கவிட்ட நெட்டிசன்கள்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று வரலாறு காணாத அளவில் ரூ.70.01 ஆக சரிந்துள்ளது. இதற்கு, 'இறுதியாக இதைச் செய்து சரிக்கட்டிவிட்டீர்கள் மோடி ஜி' என மோடி அரசாங்கத்தைக் காங்கிரஸ் விமர்சித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாகக் காங்கிரஸ் தலைவர்களும் ட்வீட் செய்து, மோடி அரசைக் கடுமையாகச் சாடி வருகின்றனர். 

ரூபாய் மதிப்பு

துருக்கி நாட்டின்மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடை, அங்கு இருந்து இறக்குமதி செய்யப்படும் உலோகப் பொருள்கள் மீதான இரட்டிப்பு வரி உள்ளிட்ட காரணங்களால், அந்நாட்டின் கரன்சியான லிரா-வின் மதிப்பு கடுமையாகச் சரிந்துள்ளது. துருக்கியின் பொருளாதார பாதிப்பு இந்திய ரூபாய் மதிப்பில் எதிரொலித்துள்ளது. கடந்த இரு நாள்களாகத் தொடர்ந்து அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வந்தது. இந்தநிலையில், இன்று தொடங்கிய வர்த்தக நேரத்தில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சி அடைந்தது. இதனால், இந்தியப் பங்குச் சந்தைகள் ஆட்டம் கண்டுள்ளன. 

மோடி - ராகுல்

இதை விமர்சிக்கும் விதமாகக் காங்கிரஸ், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டது. பதிவிட்ட சில விநாடிகளில் 900 லைக்ஸ், 500 ரீ-ட்வீட்ஸ் எனத் தெறிக்கவிட்டனர் நெட்டிசன்கள். காங்கிரஸ் ட்விட்டர் பதிவில், `கடந்த 70 ஆண்டுகளில் நாங்கள் செய்யாததை, இறுதியாக இதைச் செய்து சரிக்கட்டிவிட்டீர்கள் மோடி ஜி' எனக் குறிப்பிட்டு அதனுடன், பரிமாற்ற மதிப்பு குறித்த ஸ்கிரீன் ஷாட் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. இந்தப் பதிவை, ரண்தீப் சிங் சுர்ஜேவலா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் மேற்கோடிட்டு, இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட இந்தப் பின்னடைவுக்கு மோடி பொறுப்பேற்க வேண்டும் என மோடி அரசை விமர்சித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது ட்விட்டர் பக்கத்தில், `இந்திய ரூபாய்க்கு உகந்த தலைவர்' எனப் பிரதமர் மோடியைக் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், இந்தியப் பொருளாதாரம் குறித்த மோடி நிகழ்த்திய உரையையும் வெளியிட்டுள்ளார்.