ஓணம் பண்டிகைக் கொண்டாட்டங்கள் ரத்து! - கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு | onam festival cancelled in kerala over floods

வெளியிடப்பட்ட நேரம்: 16:53 (14/08/2018)

கடைசி தொடர்பு:16:53 (14/08/2018)

ஓணம் பண்டிகைக் கொண்டாட்டங்கள் ரத்து! - கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு

கேரள மாநிலத்தில் பெய்துவரும் கனமழையால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், ஓணம் பண்டிகைக் கொண்டாட்டங்களை ரத்து செய்வதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். பண்டிகைக்காக ஒதுக்கப்பட்ட நிதி, மழை நிவாரண பணிக்காக வழங்கப்படும் எனவும் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

பினராயி விஜயன்

கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் திருவனந்தபுரத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. அதன் பிறகு, பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``கேரள மாநிலத்தில் ஏற்பட்ட இரண்டாம்கட்ட மழையால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வரலாற்றில் முதன்முறையாக 27 அணைகள் திறக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 215 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. பல இடங்களில் குடிப்பதற்கு தண்ணீர்கூட கிடைக்காத நிலை ஏற்பட்டது. இதனால், 60,000-க்கும் அதிகமானோர் முகாம்களில் தஞ்சம் புகுந்தனர். அதில் 30,000 பேர் இப்போதும் முகாமில் உள்ளனர். தாழ்ந்த பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீரும் சேறும் நிறைந்துள்ளன. உணவு, உடை, தண்ணீர் ஆகியவை தடையில்லாமல் வழங்கினோம். மழை அதிகரித்ததும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. அனைத்து தரப்பினரின் கூட்டு முயற்சியால் மீட்புப்பணிகள் நடந்தன. கையும் மெய்யும் மறந்து மீட்புப்பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றி.

பினராயி விஜயன்

அண்டை மாநிலங்களும் நமக்கு உதவி செய்தன. உலகத்தில் உள்ள மலையாளிகள் உதவிக்குத் தயாராகிவருகிறார்கள். மீடியாக்கள், ஐ.டி கம்பெனிகளும் உதவிக்கு முன்வந்துள்ளன. ஓணம் பண்டிகை நடத்த வேண்டாம் என முடிவு செய்துகொண்டாட்டங்களை ரத்து செய்துள்ளோம். ஓணம் பண்டிகைக்காக ஒவ்வொரு துறைக்கும் ஒதுக்கப்பட்டுள்ள நிதி, மழை நிவாரணப் பணிக்காக வழங்கப்படும். மழை பாதித்த சில பகுதிகளைப் புதிதாக நிர்மாணிக்க வேண்டும். மண் இடிந்து வீட்டைவிட்டு வெளியேறிய ஒவ்வொரு குடும்பத்துக்கும் 10,000 ரூபாய் வழங்கப்படும். வீடும் இடமும் இழந்தவர்களுக்கு 3 முதல் 5 சென்ட் இடம் வாங்க 6 லட்சம் ரூபாயும், வீடு கட்ட ரூ.4 லட்சமும் வழங்கப்படும். அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் 2 நாள் சம்பளத்தை நிவாரணமாக வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். பொது வங்கிகளில் பணம் வழங்குபவர்களுக்கு சர்வீஸ் சார்ஜ் பிடிக்கக் கூடாது என வங்கிகளுக்கு வேண்டுகோள் வைத்துள்ளோம். மழையால் மீன்பிடி உபகரணங்களை இழந்தவர்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் வாங்க அரசு உதவி வழங்கும்" என்றார்.