வெளியிடப்பட்ட நேரம்: 20:10 (14/08/2018)

கடைசி தொடர்பு:20:10 (14/08/2018)

`திருமணம் எப்போது ராகுல்...?' - காங்கிரஸ் தலைவரின் பளீச் பதில்

பத்திரிகையாளர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தன் திருமணம் குறித்துப் பேசியுள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

 ராகுல்

ஹைதரபாத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. இந்தப் பயணத்தின் ஒருபகுதியாக மூத்த பத்திரிகையாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ராகுல் நேர்த்தியாகப் பதிலளித்துள்ளார்.

கலந்துரையாடல் நிகழ்ச்சியில், `அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் பா.ஜ.க வெற்றிபெற முடியாது. மக்களவையில் பா.ஜ.க-வுக்கு 230 இடங்கள் கிடைப்பது மிகவும் கடினம். நாட்டின் அடுத்த பிரதமராக மோடி பதவியேற்க மாட்டார். உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரில் கூட்டணி அமைத்தாலும் பா.ஜ.க வெற்றி பெறமுடியாது. தெலங்கானாவில் காங்கிரஸ் நிச்சயம் ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது' என்றவரிடம் 2014 தேர்தலில் ஆந்திரப் பிரதேசத்தில் காங்கிரஸ் வீழ்ந்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு,`ஆந்திராவில் வலிமையான கட்டமைப்பை காங்கிரஸ் ஏற்படுத்தி வருகிறது' என்றார். 

இதைத் தொடர்ந்து அவரிடம் எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. இதற்கு நேர்த்தியாகப் பதிலளித்த ராகுல், `திருமணம் குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை; காங்கிரஸ் கட்சியை நான் திருமணம் செய்துகொண்டேன்' என்று கூறியுள்ளார்.