வெளியிடப்பட்ட நேரம்: 19:21 (14/08/2018)

கடைசி தொடர்பு:19:21 (14/08/2018)

ரூபாய் மதிப்பு சரிவு: காரணங்களும் தாக்கங்களும்!

ரூபாய் மதிப்பு 80 ஆகச் சரிந்தாலும் கூட அரசுக்கு கவலை இல்லை. இந்தியாவிடம் போதுமான அந்நியச் செலாவணி கையிருப்பு உள்ளது.

ரூபாயின் மதிப்பு, வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு செவ்வாய்க்கிழமையன்று 70.06 ஆகக் கடுமையாகச் சரிந்தது. துருக்கியில் நிலவி வரும் ஸ்திரமற்றத் தன்மையே இந்த வீழ்ச்சிக்குக் காரணம் எனக் கூறப்படும் நிலையில், இந்தச் சரிவு குறித்து அச்சப்படத் தேவையில்லை என பொருளாதார விவகாரங்களுக்கான செயலர் சுபாஷ் சந்திரா கார்க் தெரிவித்துள்ளார். 

ரூபாய் மதிப்பு சரிவு

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது மற்றும் அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தகப் போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த சில மாதங்களாகவே டாலருக்கான தேவை அதிகரித்து வந்தது. இதன் காரணமாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு கடந்த சில மாதங்களாகவே சரிவைச் சந்தித்து வந்தது. 

அந்நியச் செலவாணி சந்தையில் திங்கள்கிழமையன்றே, ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத வகையில், 69.91 ஆக சரிந்து, பின்னர் ஓரளவுக்கு மீண்டு, மாலை வர்த்தகம் நிறைவடையும்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 69.92 ஆகக் காணப்பட்டது. 

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமையன்று காலை வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே இந்திய ரூபாயின் மதிப்பு, வரலாற்றில் எப்போது இல்லாத அளவுக்கு 70.09 ஆக வீழ்ச்சியடைந்து, பின்னர் 69.68 என்ற நிலைக்கு மீண்டது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பொருளாதார விவகாரங்களுக்கான செயலர் சுபாஷ் சந்திரா கார்க், ``ரூபாயின் வீழ்ச்சிக்கு சில வெளிக் காரணிகள்தான் காரணம். எனவே, அது குறித்து கவலையடைய வேண்டாம்" என்றார். 

ரூபாய் மதிப்பு எந்த அளவுக்கு சரிந்தால், அது அரசுக்கு கவலை அளிக்கக்கூடியதாக இருக்கும் என்று செய்தியாளர்கள் கேட்டபோது, ``டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 80 ஆகச் சரிந்தாலும் கூட அரசுக்கு கவலை இல்லை. இந்தியாவிடம் போதுமான அந்நியச் செலாவணி கையிருப்பு உள்ளது" என சுபாஷ் தெரிவித்தார். 

பங்குச் சந்தையில் ஏற்றம்

ரூபாய் மதிப்பு சரிவினால் ஐடி துறைப் பங்குகள் ஏற்றமடைந்தன. தேசியப் பங்குச் சந்தையில், நிஃப்டி ஐடி இண்டெக்ஸின் கீழ் இடம்பெற்றுள்ள 10 பங்குகளும் காலை 11.24 மணி அளவில் ஏற்றமடைந்து காணப்பட்டன. மும்பை பங்குச் சந்தையில் காலை வர்த்தகத்தின்போது, சென்செக்ஸ் 185 புள்ளிகள் வரை உயர்ந்து 37,829.93 ஆகக் காணப்பட்டது. அதேபோன்று தேசியப் பங்குச் சந்தையிலும் நிஃப்டி 32.25 புள்ளிகள் உயர்ந்து 11,392 ஆகக் காணப்பட்டது. 

தாக்கங்கள்

இந்த ஆண்டு மட்டும் ரூபாய், 8 சதவிகிதம் வரை அதன் மதிப்பை இழந்துள்ளது. இதனால் இறக்குமதியாகும் பொருள்களின் விலை அதிகரித்துள்ளது. குறிப்பாக, பெட்ரோல், மின்னணு சாதனப் பொருள்களின் விலை அதிகரித்துள்ளது. டாலருக்கு நிகரான துருக்கியின் பணமான லிராவின் மதிப்பு, இந்த ஆண்டு 45 சதவிகிதம் அளவுக்கு சரிந்துள்ள நிலையில், ``ஒரு வர்த்தகப் போரில் துருக்கி இலக்காக மாறியுள்ளது" என்று துருக்கி அதிபர் தயீப் எர்டோகன் தெரிவித்துள்ளார். 

ரிசர்வ் வங்கிக்கு சிக்கல்

அதே சமயம் ரூபாய் மதிப்பு சரிவு, பணவீக்கத்தைக் கட்டுப்பாட்டில் வைக்க நினைக்கும் ரிசர்வ் வங்கிக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. விலைவாசி உயர்வைக் கட்டுக்குள் வைப்பதற்காக ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் தலைமையிலான நிதிக் கொள்கைக் குழு, கடந்த ஜூன் மாதத்திலிருந்து இரண்டு முறை வட்டி விகிதத்தை அதிகரித்த நிலையில், ரூபாய் மதிப்பின் ஏற்ற இறக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பை 23 பில்லியன் டாலராக ரிசர்வ் வங்கி குறைத்தது. ஆனாலும், நாட்டின் சில்லறை பணவீக்கம் ஜூலை மாதத்தில் 4.17 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக திங்கள்கிழமையன்று வெளியிடப்பட்ட அரசின் புள்ளி விவரத் தகவல் தெரிவிக்கிறது. 

ரிசர்வ் வங்கி

ரூபாய் மதிப்பு மேலும் சரியுமா? 

இந்த நிலையில், ரூபாய் மதிப்பு மேலும் சரிவடைவதற்கு வாய்ப்பில்லை எனப் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ``இந்தியாவின் மேக்ரோ காரணிகள் நல்ல அடித்தளத்தைக் கொண்டதாக உள்ளது. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 70 ஐத் தொடும் என்பது ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். ஆனால், இதுதான் தடை நிலை. இதற்கு மேல் சரிவடைய வாய்ப்பில்லை. ஏற்றுமதியாளர்களுக்கு, தங்களது நிலையைப் பாதுகாத்துக்கொள்ள இதுதான் நல்ல தருணம்"  என ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் மூத்த ஆலோசகர் பஸ்கார் பாண்டா தெரிவித்துள்ளார். 

ஆனால், துருக்கியில் நிலைமை மேலும் மோசமானாலோ அல்லது டாலர் மதிப்பு இன்னும் அதிகரித்தாலோ இந்திய ரூபாய் மதிப்பு இன்னமும் சரிவடையலாம் என்றும், ஆனால், மற்ற கரன்சிகளின் மதிப்பும் சரிவடையும் என்பதால் அது குறித்து கவலை கொள்ளத்தேவையில்லை எனப் பிரபல அமெரிக்க நிதி வங்கியான ஜேபி மார்கனின் இந்தியாவுக்கான தலைமைப் பொருளாதார நிபுணரான சாஜித் சினாய் தெரிவித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க