`வீட்டின் வெளியே சிறுத்தை... உள்ளே குழந்தைகள்..!' - சாமர்த்தியமாகச் செயல்பட்ட பெற்றோர் | A leopard cub sneaked into a house in Maharashtra

வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (14/08/2018)

கடைசி தொடர்பு:10:19 (15/08/2018)

`வீட்டின் வெளியே சிறுத்தை... உள்ளே குழந்தைகள்..!' - சாமர்த்தியமாகச் செயல்பட்ட பெற்றோர்

வீட்டுக்குள் புகுந்த சிறுத்தைக் குட்டியிடமிருந்து தன் இரண்டு குழந்தைகளையும் காப்பாற்றியுள்ளனர் பெற்றோர். நூதனமாகச் செயல்பட்ட பெற்றோரை வனத்துறை அதிகாரிகள் பாராட்டியுள்ளனர். 

சிறுத்தை

மகாராஷ்டிரா மாநிலத்தில் நாசிக் மாவட்டத்தில் உள்ள தமங்கான் கிராமத்தில் பழங்குடியின மக்கள் அதிகம் வாழ்ந்து வருகின்றனர். காடுகள் நிறைந்த பகுதியான இங்கு, சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளது. இந்நிலையில், சிறுத்தைக்குட்டி, ஒருவரின் வீட்டுக்குள் புகுந்துள்ளது. வீட்டின் முன்பகுதி வழியாக நுழைந்த சிறுத்தைக்குட்டி, ஜன்னல் அருகில் படுத்து உறங்கியுள்ளது. இதில், கொடுமை என்னவென்றால், அதே ஜன்னலின் உட்புறத்தில் இரண்டு குழந்தைகள் படுத்து உறங்கியுள்ளனர். 

அப்போது, எதேச்சையாக எழுந்த அக்குழந்தைகளின் அம்மா, தன் குழந்தைகளின் மிக அருகில் சிறுத்தைக் குட்டி இருப்பதைக் கண்டுள்ளார். அந்தத் தருணத்தில், சிறிதும் பதற்றப்படாமல் மெதுவாகக் குழந்தைகளை எடுத்து பக்கத்து அறையில் பாதுகாப்பாக வைத்துள்ளார். அதன்பிறகு, கிராமத்தினருக்கும் வனத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்திருக்கின்றனர். இதையடுத்து, விரைந்த அதிகாரிகள் மூன்று வயது சிறுத்தைக் குட்டியைப் பத்திரமாகப் பிடித்துச் சென்றனர். 

இதுகுறித்து அதிகாரி கோரக்ஷ்யநாத் யாதவ் கூறுகையில், `அதிகாலை 5.30 மணியளவில் கண்விழித்த அந்தப் பெண்மணி, தன் குழந்தைகளின் அருகில் சிறுத்தை இருப்பதைக் கண்டுள்ளார். அப்போது, கத்திக் கூச்சல் போடாமல், சிறுத்தைக்கும் இடையூறு கொடுக்காமல் குழந்தைகளைப் பத்திரமாக மீட்டுள்ளார். ஜன்னலில் கொசு வலை போடப்பட்டிருந்ததால் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் ஏற்படவில்லை' என்று கூறினார்.