இரண்டாவதாக காந்தி, இடம்பெறாத நேரு..! சர்ச்சைக்குள்ளான அருண் ஜெட்லி சுதந்திர தின வாழ்த்து

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் சுதந்திர தின வாழ்த்து ட்விட்டர் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது ட்விட்டர் பதிவுக்கு நெட்டீசன்கள் கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர். 

நாடு முழுவதும் 72-வது சுதந்திர தின விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி, கொடியேற்றி உரையாற்றினார். அதேபோல, சென்னைக் கோட்டையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசியக் கொடியேற்றி உரையாற்றினார். இதற்கிடையில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, சுதந்திர தின வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், தேசியக் கொடியின் வண்ணங்கள் பின்புற நிறங்களாக இருக்க, அதில், சுதந்திரப் போராட்டத் தலைவர்களின் படங்கள் இடம் பெற்றுள்ளன.

அதில், இந்தியாவின் இரும்பு மனிதன் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேல் புகைப்படம் மத்தியில் இடம் பெற்றுள்ளது. அவரது இடது புறம் காந்தியின் படமும் வலது புறம் பகத் சிங் படமும் இடம் பெற்றுள்ளது. பகத்சிங்கை அடுத்து, நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் படமும், காந்தியையடுத்து, கோபால கிருஷ்ண கோகலேவின் படமும் இடம்பிடித்துள்ளது. தேசபிதா என்று அழைக்கப்படும் காந்தி புகைப்படத்தை மத்தியில் வைக்காமல் அடுத்த இடத்தில் வைத்துள்ளது, விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், நேருவின் படமும் அதில் இடம் பெறவில்லை. அதுவும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. அதே படத்தில் நேருவின் படத்தைப் போட்டும், காந்தியின் படத்தைப் பெரிதாகப் போட்டும் நெட்டீசன்கள் அருண் ஜெட்லிக்குப் பதிலளித்துவருகின்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!