வெளியிடப்பட்ட நேரம்: 14:21 (15/08/2018)

கடைசி தொடர்பு:20:00 (22/08/2018)

கேரளாவை மீண்டும் அச்சுறுத்தும் மழை! 8 மாவட்டங்களுக்கு 2-வது ரெட் அலர்ட்

கேரளாவில் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள 8 மாவட்டங்களுக்கு இரண்டாவது முறையாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 

கேரளா

கடந்த சில நாள்களாகப் பெய்து வரும் தென்மேற்குப் பருவ மழை கேரளாவை புரட்டிப் போட்டுள்ளது. அங்குள்ள அனைத்து அணைகளும் நிரம்பியுள்ளதால் அவற்றின் மதகுகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் கேரளத்தின் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறிப்போயுள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். பல ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

Photo Credits : Twiter/@ari_maj

முக்கிய நகரங்களிலிருந்து பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. அப்பகுதிகளில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு மாநிலங்களிலிருந்தும் கேரளாவுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. முன்னதாக கேரளாவில் உள்ள அனைத்து ஆறுகளும் நிரம்பியதால் அங்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் வயநாடு, கோழிகோடு, கண்ணூர், காசர்கோடு, மலப்புரம், பாலக்காடு, இடுக்கி, எர்ணாகுளம் போன்ற 8 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் மீண்டும் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. கேரள வரலாற்றில் இல்லாத அளவு தற்போது மழை பெய்து வருவதால் இரண்டாவது முறையாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மோசமான வானிலை மற்றும் வெள்ளம் காரணமாக கொச்சி விமானநிலையம் வரும் ஆகஸ்ட் 18-ம் தேதி வரை மூடப்படுவதாக விமானநிலைய நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.