வெளியிடப்பட்ட நேரம்: 17:14 (15/08/2018)

கடைசி தொடர்பு:17:14 (15/08/2018)

ஆண்டுக்கு 4.7 லட்சம் விபத்துகள்... 1.5 லட்சம் மரணங்கள்... உறைய வைக்கும் சாலை விபத்துகள்!

கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட விபத்துகளுக்கு அரசு பல்வேறு காரணங்களைப் பட்டியலிட்டுள்ளது.

ஆண்டுக்கு 4.7 லட்சம் விபத்துகள்... 1.5 லட்சம் மரணங்கள்... உறைய வைக்கும் சாலை விபத்துகள்!

சென்னையில் அதிவேகமாக காரில் செல்வதும் அதனால் விபத்துகள் நிகழ்வதும் இப்போதும் தினசரி செய்தியாகும் அளவுக்கு அதிகரித்துவிட்டது. இரண்டு வாரங்களுக்கு முன்பு, இதே போன்றொரு நிகழ்வு கோவையில் ஓர் அதிகாலை வேளையில் நிகழ்ந்தது. அதிவேகத்தில் பாய்ந்த `ஆடி’ கார் மோதியதில் சாலையோரம் பல்வேறு பணிகளுக்காக இருந்த எளிய மக்கள் ஆறு பேர் கொடூரமாக உயிரிழந்தனர்.  

இவை மிகச் சமீபத்திய உதாரணங்கள். இந்திய அளவில் இருக்கும் புள்ளிவிவரங்களின் படி, தமிழ்நாடு சாலை விபத்துகளில் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. கடந்த ஆண்டு நடந்த விபத்துகளின் எண்ணிக்கையை விட, இந்த ஆண்டு விபத்துகள் குறைந்திருப்பது சற்றே ஆறுதல் தரும் செய்தி. ஆனாலும் விபத்துகளால் ஏற்படும் மரணங்கள் அதிகரிப்பது கவலையளிக்கும் விஷயமாகவே உள்ளது. 

தமிழ்நாடு மட்டுமல்லாமல், இந்திய அளவிலும் சாலை விபத்துகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. 2016-ம் ஆண்டு, நாடு முழுவதும் 4 லட்சத்து 80 ஆயிரம் சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. அந்த விபத்துகளில் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 2017-ம் ஆண்டு இந்த எண்ணிக்கை குறைந்து, மொத்தமாக 4 லட்சத்து 60 ஆயிரம் விபத்துகளும், அவற்றில் 1 லட்சத்து 47 ஆயிரம் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக் காட்டுகின்றன. 

விபத்துகள்

தமிழ்நாட்டில் 2016-ம் ஆண்டு 71 ஆயிரம் சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. அவற்றில் 17 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 2017-ம் ஆண்டு நிகழ்ந்துள்ள விபத்துகளின் எண்ணிக்கை, 65 ஆயிரம்; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 16 ஆயிரம். கடந்த ஐந்து ஆண்டுகளில், 2016-ம் ஆண்டு தமிழ்நாடு முழுவதும் விபத்துகள் அதிக அளவில் நிகழ்ந்துள்ளன. இதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளும் போதிய அளவில் இல்லை என்பதே மக்கள் சொல்லும் புகாராக உள்ளது. 

விபத்துகளின் எண்ணிக்கை - 2016:

இந்தியா - 480652

தமிழ்நாடு - 71431

உத்தரப் பிரதேசம் - 35612

புதுச்சேரி - 1766

மிசோரம் - 83

விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை - 2016:

இந்தியா- 150785

தமிழ்நாடு - 17218

உத்தரப் பிரதேசம் - 19320

புதுச்சேரி - 244

மிசோரம் - 70

விபத்துகளின் எண்ணிக்கை - 2017:

இந்தியா- 464910

தமிழ்நாடு - 65562

உத்தரப் பிரதேசம் - 38783

புதுச்சேரி- 1693

மிசோரம்- 68

விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை - 2017:

இந்தியா - 147913

தமிழ்நாடு - 16157

உத்தரப்பிரதேசம்  - 20124

புதுச்சேரி - 233

மிசோரம் - 60

சாலை விபத்துகளில் தமிழ்நாட்டை விட அதிகமான விபத்துகளோடு, உத்தரப் பிரதேசம் முதலிடம் வகிக்கின்றது. 2016-ம் ஆண்டு, உத்தரப் பிரதேசத்தில் 35 ஆயிரம் விபத்துகளும், 19 ஆயிரம் உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன. 2017-ம் ஆண்டு, இந்த எண்ணிக்கை 38 ஆயிரம் விபத்துகளாகவும், 20 ஆயிரம் உயிரிழப்புகளாகவும் அதிகரித்துள்ளது. 

யூனியன் பிரதேசங்களில் டெல்லியில் அதிக அளவில் சாலை விபத்துகளும் உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன. புதுச்சேரியில் ஆண்டுதோறும் ஏறத்தாழ 1700 விபத்துகளும், 200 உயிரிழப்புகளும் நிகழ்ந்து வருகின்றன. 

இந்திய அளவில் மிசோரம் மாநிலத்தில் மிகக் குறைவான சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. 2016-ம் ஆண்டு 83 விபத்துகளையும், 70 உயிரிழப்புகளையும் பதிவுசெய்த நாகாலாந்து, 2017-ம் ஆண்டில் 68 விபத்துகளையும், 60 உயிரிழப்புகளையும் சந்தித்துள்ளது. இது தேசிய சராசரியைவிட கணிசமாகக் குறைந்த எண்ணிக்கையாக உள்ளது. 

விபத்து

கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட விபத்துகளுக்கு அரசு பல்வேறு காரணங்களைப் பட்டியலிட்டுள்ளது. அதிவேகமாகப் பயணிப்பதால் பெரிய அளவில் விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன என அந்தப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக, கவனக்குறைவாகவும், ஆபத்தாகவும் பயணிப்பது குறிப்பிடப்பட்டுள்ளது. 

சாலை விபத்துகளைக் குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அறிவித்துள்ளது. எனினும், சாலைகளில் பயணிப்பவர்கள் தங்கள் உயிரையும், மற்றவர்கள் உயிரையும் கருத்தில் கொண்டு விதிகளை மீறாமல், கவனம் சிதறாமல் பயணம் செய்வது சாலை விபத்துகளை பெரும் அளவில் குறைக்கும். 


டிரெண்டிங் @ விகடன்