வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (15/08/2018)

கடைசி தொடர்பு:17:00 (15/08/2018)

`பிரதமர் கூறிய திட்டத்துக்குத்தான் இனி முன்னுரிமை' - இஸ்ரோ தலைவர் பேச்சு

``பிரதமர் மோடி கூறியபடி விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் 2022-க்குள் செயல்படுத்தப்படும்'' என இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்துள்ளார். 

சிவன்

டெல்லி செங்கோட்டையில் இன்று காலை நடைபெற்ற சுதந்திரதின விழாவில் பிரதமர் மோடி தேசியக்கொடியை ஏற்றிவைத்து முப்படைகளின் மரியாதையை ஏற்றுக்கொண்டார். பிறகு அவர் பேசிய சுதந்திர தின உரையில் பல்வேறு திட்டங்கள் குறித்து பேசினார். குறிப்பாக வரும் 2022-ம் ஆண்டுக்குள் விண்வெளிக்கு இந்தியர்களை அனுப்பும் ககன்யான் திட்டம் செயல்படுத்தப்படும் எனக் கூறினார். 

பிரதமரின் கருத்து குறித்து பேசிய இஸ்ரோ தலைவர் கே.சிவன், ``ககன்யான் (Gaganyaan ) திட்டத்தைச் செயல்படுத்த 2022-ம் ஆண்டை இலக்காக நிர்ணயித்துள்ளார். நாங்கள் அதை நிச்சயம் எதிர்கொள்வோம். இதற்கான பணிகள் ஏற்கெனவே நடைபெற்று வருகின்றன. விண்வெளி வீரர்கள் குழு தங்கும் கலம், விபத்து நடந்தால் பிழைப்பதற்கான தொழில்நுட்பம் ஆகிய வேலைகள் நிறைவடைந்துள்ளன. இனி பிரதமர் கூறிய ககன்யான் திட்டத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வரும் 2022-ல் விண்வெளிக்கு மனிதர்கள் அனுப்பப்படும்” எனக் கூறினார்.