`பத்தாண்டுகளுக்கு மேலாக டெலிவரி செய்யப்படாத கடிதங்கள்!’ - பள்ளிச் சிறுமியால் சிக்கிய போஸ்ட்மேன்

ஒடிசா மாநிலத்தின் பத்ரக் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராம அஞ்சலகத்தில் டெலிவரி செயப்படாத ஆயிரக்கணக்கான கடிதங்கள் இருப்பதாக அளிக்கப்பட்ட புகாரை அடுத்து, போஸ்ட்மேன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். 

போஸ்ட்மேன் பணியிடை நீக்கம்

சமூக வலைதளங்கள், இ-மெயில் என தகவல் தொடர்புக்கு ஆயிரம் வசதிகள் இருப்பினும், அரசு துறை சார்ந்த தகவல் தொடர்புகள் உள்ளிட்ட பல தகவல்கள், அஞ்சலகங்கள் மூலம்தான் இன்றளவும் அனுப்பப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் இருக்கும் அஞ்சலகங்கள், தனியார் கூரியர் சேவை வழியாக தினமும் லட்சக்கணக்கான கடிதங்கள், ஆவணங்கள் தினமும் பல்வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. 

இந்தநிலையில், ஒடிசா மாநிலத்தின் பத்ரக் மாவட்டத்தில் உள்ள ஒதாங்கா கிராமத்தில் செயல்பட்டு அஞ்சலகத்தில் ஜகன்னாத் புஹான் என்பவர் போஸ்ட் மாஸ்டராகப் பணியாற்றி வருகிறார். அவரே, அப்பகுதியில் உள்ள மக்களுக்கு வரும் கடிதங்களைக் கொண்டு சேர்க்கும் போஸ்ட் மேனாகவும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வந்திருக்கிறார்.

அவர், கடந்த பல ஆண்டுகளாக மக்களுக்கு வரும் கடிதங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை, அவர்களிடம் கொண்டு சேர்க்காமல் அலட்சியமாக இருந்து வந்திருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. பாழடைந்த பள்ளிக் கட்டடத்தில் பழைய கடிதங்கள் இருப்பதை பள்ளிச் சிறுவர்கள் சிலர் கண்டுபிடித்து ஊர் மக்களிடம் இதுபற்றி கூறியிருக்கிறார்கள். ஊர்மக்கள் அங்கு சென்று பார்த்தபோது ஆயிரக்கணக்கான கடிதங்கள் இருப்பது தெரியவந்திருக்கிறது. கடந்த சில நாள்களுக்கு முன்னர் வரை அஞ்சலகம் அந்த கட்டடத்தில்தான் செயல்பட்டு வந்திருக்கிறது. இதையடுத்து, போஸ்ட்மேன் புஹான் மீது கோபம்கொண்ட மக்கள், அஞ்சல் துறை உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். அங்கிருந்த கடிதங்களில் பல 2004ம் ஆண்டு தேதியிட்டவை என்பது பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறது. 

முதற்கட்ட விசாரணையில், புஹான் அலட்சியமாகச் செயல்பட்டது தெரியவந்திருக்கிறது. இதையடுத்து அவர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இதுகுறித்து போலீஸார் கூறுகையில், `பதிவுத் தபால்கள், மணியார்டர்கள், ஸ்பீட் போஸ்ட் மற்றும் ஆதார் கார்டுகள் போன்ற பதிவு செய்துவைக்க வேண்டிய ஆவணங்களை உரியவர்களிடம் கொண்டு சேர்த்த புஹான், மற்ற சாதாரண தபால்களை உரியவர்களிடம் சேர்க்காமல் அலட்சியமாகச் செயல்பட்டிருக்கிறார். அவற்றுக்கென தனியாக பதிவுகள் இல்லாததால், அதுகுறித்து அதிகாரிகளுக்கோ, பொதுமக்களுக்கோ இதுவரை சந்தேகம் எதுவும் வராமல் இருந்திருக்கிறது. அங்கிருந்த கடிதங்களில் சில மத்திய அரசு மற்றும் மாநில அரசின் பணியாளர் தேர்வாணையங்கள் நடத்தும் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் அனுப்பிய கடிதங்கள் இருந்தன’’ என்று தெரிவித்தனர்.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!