வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (15/08/2018)

கடைசி தொடர்பு:20:40 (15/08/2018)

வரலாறுகாணாத மழை..பாதுகாப்பாக இருங்கள் மக்களே! - முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள்

மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவுறுத்தியுள்ளார்.

கேரளா - பிணராயி விஜயன்

கேரளாவில் பெய்த கனமழையால் பல இடங்களில் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வீடுகளில் வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் முகாம்களில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். மழையால் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக பல இடங்களில் சாலைகள் தேசம் அடைந்துவிட்டன. இதனால், போக்குவரத்தும் முற்றிலுமாக முடங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

பிணராயி விஜயன்

இந்நிலையில், முதல்வர் பினராயி விஜயன் மக்களைப் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக முதல்வர் கூறியதாவது, `கேரளா வரலாற்றில் இதுவரை காணாத இயற்கை பேரிடரை நாம் கண்டுள்ளோம். அணைகள் அனைத்தும் நிரம்பி விட்டன. அடுத்த நான்கு நாள்களுக்கு மழை இருக்கும். நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். தொடர் மழையால் பாதிக்கப்பட்ட நமக்கு அண்டை மாநிலங்கள் உதவி செய்து வருகின்றன. எதிர்காலத்திலும் நமக்கு அவர்களின் உதவி தேவைப்படுகிறது. அனைத்து அதிகாரிகளும் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளது. அதனால், மோட்டார்கள் சேதமடைந்துள்ளன. இதை அனைத்தையும் மனதில் வைத்துக்கொள்வோம். மக்களுக்கு குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' எனக் கூறியுள்ளார்.