வெளியிடப்பட்ட நேரம்: 22:32 (15/08/2018)

கடைசி தொடர்பு:22:34 (15/08/2018)

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடம்! - எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. 

 பிரதமர் மோடி

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வயது மூப்பின் காரணமாக நீண்ட காலமாக அரசியலில் இருந்து ஓய்வில் இருந்துவருகிறார். இந்தநிலையில், அவருக்கு சிறுநீரகத்தில் ஏற்பட்ட தொற்று காரணமாக கடந்த ஜூன் 11-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுநீரகத் தொற்று உள்ளிட்ட பிரச்னைகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார். அவரை பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் சந்தித்து நலம் விசாரித்தனர். 

இந்தநிலையில், பிரதமர் மோடி இன்று மீண்டும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்தார். அப்போது வாஜ்பாயை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேல் அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்தார். முன்னதாக கடந்த 12ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பா.ஜ.க தலைவர் அமித் ஷா ஆகியோர் வாஜ்பாயை  நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தனர். இந்தநிலையில் வாஜ்பாயின் உடல்நிலை குறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. 

எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை

அந்த அறிக்கையில், ``முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த 9 வாரங்களாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். துரதிருஷ்டவசமாக கடந்த 24 மணிநேரமாக அவரது உடல்நிலையில் தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டு வருகிறது. அவரது நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. மேலும், அவருக்கு உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்கள் உதவியுடன் தொடர்சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க