வெளியிடப்பட்ட நேரம்: 11:25 (16/08/2018)

கடைசி தொடர்பு:11:25 (16/08/2018)

`விண்வெளியில் 7 நாள்கள் வரை மனிதர்களைத் தங்கவைக்க திட்டம்'- இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்!

 சுதந்திர தின உரையில் மோடி அறிவித்தபடி, '2022 -ம் ஆண்டுக்குள் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை நிறைவேற்ற முடியும்' என இஸ்ரோ தலைவர் சிவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

மோடி

நாட்டின் 72 - வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அறிவித்த முக்கிய அறிவிப்பில் ஒன்று, விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம். இது தொடர்பாக அவர் பேசும்போது, “அறிவியல் துறையில் நாம் சிலவற்றை கனவு கண்டுள்ளோம். நமது விஞ்ஞானிகள், சில கனவு கண்டுள்ளார்கள். அதன்படி, வரும் 2022 -ம் ஆண்டுக்குள், அதாவது நாட்டின் 75 - வது சுதந்திர தின ஆண்டில், இந்தியா விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை நிறைவேற்றும்” என நம்பிக்கை தெரிவித்தார். பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பு, இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறையில் மிக முக்கிய அறிவிப்பாகும். 

இஸ்ரோ தலைசர்சிவன்

பிரதமரின் இந்த அற்விப்பை அடுத்து, அனைவரின் கவனமும் இஸ்ரோ மீது திரும்பியுள்ளது. இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், “பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பு, மிகச் சிறந்த தொடக்கம் என்றுதான் சொல்ல வேண்டும். விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்துக்கு முன்னால், இரண்டு ஆளில்லா விண்வெளித் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. முதலாவது, வரும் 2020-ம் ஆண்டில் செலுத்தப்படும். குறைந்தது 7 நாள்கள் வரை மனிதர்கள் விண்வெளியின் தங்கியிருக்கும் படியாக எங்களின் திட்டத்தை வகுத்துவருகிறோம். பூமியிலிருந்து சுமார் 300 முதல் 400 கிலோ மீட்டர் உயரத்தில் விண்கலம் நிலைநிறுத்தப்படும். இந்தத் திட்டத்துக்கு, சக்திவாய்ந்த   ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ( GSLV -MK III) வகை ராக்கெட்டை பயன்படுத்த உள்ளோம்” என்றார். 

மனிதர்களை அனுப்பும் முன்னர், விலங்குகளை அனுப்பும் திட்டம் உள்ளதா என்ற கேள்விக்கு, அதுகுறித்து விவாதித்து முடிவு செய்யப்படும் என்றார். மேலும், “இந்தத் திட்டத்துக்கு முதலில் ஒப்புதல் பெற வேண்டும். இதற்கு 10,000 கோடிக்கும் குறைவாகவே செலவாகும்படி திட்டத்தை வகுத்துள்ளோம். இதற்குத் தேவையான சில புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகிறோம். சில தொழில்நுட்பங்கள் நம்மிடமே இருக்கிறது. அவை, முழுவதும் இந்தியாவில் தயாரிப்பதுதான் எங்களின் முக்கிய குறிக்கோளாக உள்ளது. இந்தக் கனவை நிறைவேற்ற கடும் உழைப்பு அவசியம். இந்தத் திட்டம் தொடங்கியதும், சுமார் 15,000 வேலை வாய்ப்புகள் உருவாகும்” என்றார்.  அதேபோன்று, விண்வெளிக்குச் செல்லும் வீரர்களை இந்திய விமானப் படை தேர்வுசெய்யும். அவர்களுக்கு, பின்னர் பயிற்சி அளிக்கப்படும் என்றார்.