`வாழும் மகாத்மா நலம்பெற கூட்டுப் பிரார்த்தனை நடத்துவோம்’ - தமிழிசை உருக்கம்!  |  Tamilisai about vajpayee health condition

வெளியிடப்பட்ட நேரம்: 11:48 (16/08/2018)

கடைசி தொடர்பு:11:48 (16/08/2018)

`வாழும் மகாத்மா நலம்பெற கூட்டுப் பிரார்த்தனை நடத்துவோம்’ - தமிழிசை உருக்கம்! 

`முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை மேலும் பின்னடைந்துள்ளது என்ற செய்தி நெஞ்சை உலுக்குகிறது’ என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். 

வாஜ்பாய்
 

பா.ஜ.க மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாய், கடந்த சில வாரங்களாக வயது மூப்பின் காரணமாக சிறுநீர்த்தொற்று நோய் ஏற்பட்டு, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகிறார். வாஜ்பாயின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக நேற்று எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இதையடுத்து, பிரதமர் மோடி, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் மருத்துவமனை சென்று நேரில் நலம் விசாரித்தனர். இவர்களைத் தொடர்ந்து, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானி, ராஜ்நாத் சிங் உள்ளிட்டவர்கள் இன்று காலை எய்ம்ஸ் மருத்துவமனை சென்று நலம் விசாரித்தனர். வாஜ்பாய் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு, பா.ஜ.க சார்பில் நாடு முழுவதும் நடைபெறவிருந்த அனைத்துக் கூட்டங்களும் ரத்துசெய்யப்படுவதாக அக்கட்சி அறிவித்துள்ளது. 

தமிழிசை
 

இந்த நிலையில், வாஜ்பாய் உடல்நிலைகுறித்து வருத்தம் தெரிவித்துள்ள தமிழிசை,  ``மரியாதைக்குரிய முன்னாள் பாரதப் பிரதமர், வாழும் மகாத்மா, மிகச் சிறந்த ஆட்சியை நாட்டு மக்களுக்கு வழங்கிய, நம் அனைவரும் பெரிதும் நேசிக்கும் ஒப்பற்ற தலைவர் வாஜ்பாயின் உடல் நிலை மேலும் பின்னடைந்துள்ளது என்ற செய்தி நெஞ்சை உலுக்குகிறது. அவர் நலம்பெறுவதுதான் நம் அனைவருக்கும் ஆத்ம பலம் தரும் என்பதுதான் உண்மை. அவர் நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இந்நேரத்தில், நம் அனைவரும் கூட்டுப் பிரார்த்தனை நடத்துவோம் என்று வேண்டி கேட்டுக்கொள்கிறேன்’' என்று உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க