வெளியிடப்பட்ட நேரம்: 12:20 (16/08/2018)

கடைசி தொடர்பு:12:20 (16/08/2018)

கேரளாவுக்கு நடிகர் விஷால் ரூ.10 லட்சம் நிதியுதவி!

கேரள மாநிலத்தில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, நடிகர் விஷால் 10 லட்ச ரூபாய் நிவாரண உதவி வழங்கியுள்ளார். 

விஷால்


கேரள மாநிலத்தில், கடந்த  இரண்டு  வாரங்களாகக் கனமழை பெய்துவருகிறது. இதன் காரணமாக, மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. அணைகள் நிரம்பியுள்ளதால், கூடுதல் தண்ணீர்  திறக்கப்பட்டுவருகிறது. இந்த நிலையில், இன்னும் இரண்டு நாள்களுக்கு கர்நாடகா மற்றும் கேரள கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

முப்படைகளுடன் தேசிய பேரிடர் மீட்புப் படையும் சேர்ந்து, மாநிலம் முழுவதும் மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளது. பிரதமர் மோடி, இன்று காலை கேரள முதல்வரிடம் நிவாரணப் பணிகள் தொடர்பாகப் பேசினார். தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக பிரதமர் உறுதி அளித்துள்ளார். இந்த நிலையில், நடிகர் விஷால் கேரளாவுக்குத் தனது உதவிக்கரத்தை நீட்டியுள்ளார். கேரள மாநில முதல்வர் நிவாரண நிதிக்கு அவர் ரூ.10 லட்சம் வழங்கினார்.  முன்னதாக நடிகர்கள் கமல், சூர்யா, கார்த்தி உள்ளிட்டவர்கள் நிவாரண நிதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. தென்னிந்திய நடிகர்கள் சங்கமும் முதல் கட்டமாக ரூ.5 லட்சம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.