அனைத்துத் தொடர்புகளும் துண்டிப்பு! - கேரளாவுக்காகப் பிரார்த்திக்கும் மோடி

கேரளாவில் பெய்துவரும் கன மழையால், அம்மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. கேரளாவுக்குச் செல்லும் அனைத்துப் பாதைகளும் துண்டிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் கடும் இன்னலைச் சந்தித்துவருகின்றனர். 

கேரளா

PhotoCredits : Twitter/@Vijayfanzh

கேரளாவில், ஆகஸ்ட் 9-ம் தேதி தொடங்கிய மழை பேரழிவை உண்டாக்கியுள்ளது. தொடர் மழையால் ஒருபுறம் அணைகள் நிரம்பி வருகின்றன.  மறுபுறம் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு, இதுவரை 67 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும், நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 25 பேர் இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்கும் மேலாக கேரள மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப்போயுள்ளது. துணை ராணுவப்படையினர் தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். முக்கிய 22 அணைகளும் திறக்கப்பட்டுள்ளதால், ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இது, கடந்த 94 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பேரழிவு எனப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், மேலும் சில நாள்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதால், மாநிலத்தின் 14 மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கோழிக்கோடு, கொச்சி விமான நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. 

இந்த நிலையில் பிரதமர் மோடி, கேரள முதல்வர் பினராயி விஜயனைத் தொடர்புகொண்டு, மாநிலத்தின் நிலைபற்றி கேட்டறிந்துள்ளார். இதுகுறித்து மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று காலை கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் பேசினேன். நாங்கள் அம்மாநில வெள்ள நிலவரம்குறித்து ஆலோசித்தோம். மீட்புப் பணிகளுக்காகவும் நிவாரணப் பணிகளுக்காவும் பாதுகாப்புப் படையினரின் உதவி தேவையா எனக் கேட்டறிந்தேன். இந்தத் துயரிலிருந்து கேரள மக்கள் விரைவில் மீண்டு வர பிரார்த்திக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார். 

PhotoCredits : Twitter/@Forumkeralam1

கேரளாவில் உள்ள அனைத்துப் போக்குவரத்து வசதிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தரை, வான் வழி, சாலை போன்ற அனைத்து வசதிகளும் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. விமான நிலையங்களில் தண்ணீர் புகுந்ததாலும், மோசமான வானிலை காரணமாகவும் கோழிக்கோடு, கொச்சி விமான நிலையங்கள் நேற்று மூடப்பட்டன. இதைத் தொடர்ந்து, ரயில் வழித்தடங்களில் தண்ணீர் தேங்குவதால் ரயில்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. முட்டம் பகுதியில் மெட்ரோ வழித்தடத்தில் நீர் புகுந்துள்ளதால், மெட்ரோ போக்குவரத்தும் தடைபட்டுள்ளது. நிலச்சரிவு காரணமாக பல இடங்களில் சாலை வழிப் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் இருந்து தனித்து விடப்பட்ட நிலையில் கேரளா உள்ளது. இருப்பினும், பல மாநிலங்களில் இருந்தும் தொடர்ந்து நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுவருகின்றன. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!