`கேரளாவில் துயரமான சூழ்நிலை நிலவுகிறது..!' -பினராயி விஜயன் வேதனை

இடைவிடாது கொட்டித்தீர்க்கும் கனமழையால், கேரளாவில் உள்ள பல மாவட்டங்கள் தனித் தீவுபோல காட்சியளிக்கின்றன. பல பகுதிகளில்  நிலச்சரிவும் ஏற்பட்டுவருகிறது. இதனால், மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கேரளா மழை

தென்மேற்குப் பருவமலை தீவிரமடைந்ததால், கேரளாவில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பிவிட்டன. இதனால், அணைகளிலிருந்து அதிகப்படியான தண்ணீர் வெளியேற்றப்பட்டுவருகிறது. ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கேரள வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு பெய்துவரும் கனமழையால், கடவுளின் தேசம் வெள்ளக்காடாகக் காட்சி அளிக்கிறது. அனைத்துத் தொடர்புகளும் துண்டிக்கப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதில், உச்சக்கட்ட துயரமாக, நேற்று மட்டும் 25 பேர் உயிரிழந்ததாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதுவரையிலும் 67 பேர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனர். 

பினராயி விஜயன்

பெரு மழையால், தங்களது உடைமைகளை இழந்துள்ள கேரள மக்களுக்காக நாடுமுழுவதும் ஆறுதல் குரல்கள் எழுந்துவருகின்றன. அண்டை மாநிலங்கள் உதவிகள் செய்துவருகின்றன. மத்திய அரசும் உடனடியாக உதவ நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. இந்த நிலையில், முதல்வர் பினராயி விஜயன், கேரளாவில் துயரமான சூழ்நிலை நிலவுவதாகத் தெரிவித்துள்ளார். ``கிட்டத்தட்ட மாநிலத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் வெள்ளம் புகுந்துள்ளது. மக்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். மாநிலத்தின் நிலைகுறித்து பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டவர்களிடம் தொடர்புகொண்டு விவரித்துள்ளேன். கேரளாவுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளனர். மேலும், சில  ஹெலிகாப்டர்கள் வரவுள்ளன. மீட்புப் பணிகளை மிகத்துரிதமாக நடத்த ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது'' என்று கூறியுள்ளார்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!