வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (16/08/2018)

கடைசி தொடர்பு:16:30 (16/08/2018)

கேரளா வந்த 12 தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் - தொடரும் மீட்புப் பணிகள்!

கேரளாவில் மழை வெள்ளத்தில் சிக்கியிருப்பவர்களை மீட்பதற்காக இன்று 12 தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் திருவனந்தபுரத்துக்கு வந்துள்ளனர்.

கேரளாவில் களமிறங்கிய ராணுவத்தினர்

ஆங்காங்கு மழை நீர் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி, தண்ணீர், உணவு இல்லாமல் தவித்துக்கொண்டிருக்கும் மக்களை மீட்பதற்காக மேலும் 12 தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். இதில் 6 குழுக்கள் சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்தும், 6 குழுக்கள் டெல்லியிலிருந்தும் வந்துள்ளன. இந்தக் குழுவினர் எந்தெந்த பகுதிக்குச் செல்வார்கள் என்று பின்னர்தான் தெரியவரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பருவமழை தனது தீவிரத்தைக் காட்டியதும் மத்திய அரசின் உதவியை நாடியது கேரள அரசு. உடனே தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் கேரளாவுக்கு அனுப்பப்பட்டனர். அவர்கள், இடுக்கி மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களில் தங்களது மீட்புப் பணியை மேற்கொண்டனர். கூடவே, முப்படைகளைச் சேர்ந்த மீட்புக் குழுவினரும் களத்தில் இறங்கினர். இதனால், பலர் காப்பாற்றப்பட்டு நிவாரண முகாம்களில் பாதுகாப்பாகத் தங்கவைக்கப்பட்டனர்.

மூட்டைகளை சுமந்து செல்லும் ராணுவ வீரர்கள்

இதுவரை மத்திய அரசிடமிருந்து 52 மீட்புக் குழுக்கள் வெள்ள மீட்புப் பணியில் ஈடுபட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ராணுவம், விமானப்படை, கடலோரக் காவல்படை மற்றும் கடற்படை மீட்புக் குழுவினர் இதில் அடக்கம். விமானப்படையைச் சேர்ந்த 4 ஹெலிகாப்டர்களும் கடலோரக் காவல்படையைச் சேர்ந்த 2 கப்பல்களும் கொச்சினுக்கு வந்துள்ளதாகக் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மாநிலம் முழுவதிலுமிருந்து வரும் பலர், தன்னார்வலர்களாக மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். தமிழகத்தின் அநேகப் பகுதிகளிலிருந்தும் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான பொருள்களை எடுத்துக்கொண்டு தினம் தினம் எல்லையைக் கடந்து சென்றுகொண்டிருக்கிறார்கள்.