வெளியிடப்பட்ட நேரம்: 16:45 (16/08/2018)

கடைசி தொடர்பு:16:45 (16/08/2018)

`மீண்டும் உங்கள் குரலைக் கேட்கணும்' - வாஜ்பாயிக்காக உருகும் உறவினர்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வரும் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் உடல் மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இதனால், பா.ஜ.க-வின் முக்கிய தலைவர்கள் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.

வாஜ்பாய்

பா.ஜ.க-வின் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாய் வயது மூப்பின் காரணமாகவும், சிறுநீர்த்தொற்று நோய் ஏற்பட்டதாலும் டெல்லியில் உள்ள எம்ய்ஸ் மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு, தலைமை மருத்துவர்களின் மேற்பார்வையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வாஜ்பாயின் உடல்நலத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக நேற்று இரவு மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இதனால், பா.ஜ.க வட்டாரம் மட்டுமின்றி மக்கள் மத்தியிலும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, பிரதமர் மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று  நலம் விசாரித்தனர். இவர்களைத் தொடர்ந்து,  துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பா.ஜ.க தலைவர் அமித் ஷா உள்ளிட்டோர் இன்று காலை நேரில் சென்று உடல்நிலைகுறித்து கேட்டறிந்தனர். இதனிடையில், வாஜ்பாய் விரைவில் குணமடைய வேண்டி, தொண்டர்கள் சிறப்பு பூஜைகள் செய்துவருகின்றனர். இந்நிலையில், `மீண்டும் ஒருமுறை அவர் கணீர் குரலில் பேசுவதைக் கேட்க வேண்டும், இறைவனிடம் இதையே பிரார்த்திக்கிறேன். எங்கள் குடும்பத்தினர் மனதில் என்றைக்கும் அவர் இருப்பார். அவரின் நினைவை அழிக்கமுடியாது. விரைவில் அவர் குணமடைய வேண்டும்' என வாஜ்பாயின் உறவினர் காந்தி மிஸ்ரா கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.