வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (16/08/2018)

கடைசி தொடர்பு:17:40 (16/08/2018)

முதல்மாத சம்பளத்தை நிவாரணத்துக்கு கொடுத்தார்! - நெகிழவைத்த கேரள நர்ஸ் லினியின் கணவர்!

தனது முதல்மாத சம்பளத்தை மழை, வெள்ள நிவாரணப் பணிகளுக்கு அளித்துள்ளார் நிபா வைரஸ் தாக்குதலில் உயிரிழந்த கேரள நர்ஸ் லினியின் கணவர். 

நர்ஸ் லினி - சஜீஷ்

கடந்த மே மாதம் கேரளாவின் வட மாவட்டங்களான கோழிக்கோடு, மலப்புரம் பகுதியில் நிபா வைரஸ் பரவியது. இதில், 20 பேர் பரிதாபமாக பலியாகினர். அதில் ஒருவர் தான் கேரள நர்ஸ் லினி. பெரம்பாரா கிராமத்தில் நிபா வைரஸ் தாக்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த முகமது ஸாலிஹ், முகமது ஸாபித், மரியம் ஆகியோருக்கு மருத்துவச் சேவை செய்யும்போதுதான் நர்ஸ் லினியை வைரஸ் தாக்கியது. இதில் அவர், சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.

கேரளா முழுவதும் அவரது இறப்பு சோகத்தை ஏற்படுத்தியது. கேரள முதல்வர் பினராயி விஜயன் உட்பட பலரும் லினியின் அர்ப்பணிப்பு உணர்வை பாராட்டி உருக்கத்துடன் கருத்துகள் தெரிவித்தனர். லினியின் இறப்புக்கு பின்னர் துபாயில் வேலை பார்த்து வந்த அவரின் கணவர் சஜீஷ் நாடு திரும்பி குழந்தைகளைக் கவனித்து வருகிறார். அவருக்கு கேரள அரசின் பொது சுகாதாரத்துறையில் பணி வழங்கப்பட்டது.

சஜீஷ்

அதன்படி, கடந்த மாதம் வேலைக்குச் சேர்ந்த அவர், தற்போது தனது முதல் மாத சம்பளத்தை மழை, வெள்ள பாதிப்புகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக முதல்வர் நிவாரண நிதிக்கு அளித்துள்ளார். கேரள தொழிலாளர்துறை அமைச்சரான டி.பி.ராமகிருஷ்ணனை நேரில் சந்தித்து அவர் சம்பளத்தை நிவாரண நிதிக்கு அளித்துள்ளார். அவருக்கு தற்போது பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க