வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (16/08/2018)

கடைசி தொடர்பு:19:20 (16/08/2018)

`தேசிய கீதம் பாடிய மாணவர்கள்... தடுத்து நிறுத்திய ஆசிரியர்கள்..!’ - உ.பி-யில் புதிய சர்ச்சை

சுதந்திர தினக் கொண்டாட்டத்தின்போது தேசிய கீதம் பாடிய மாணவர்களைத் தடுத்து நிறுத்திய மதரசா ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தேசிய கீதம் பாடிய மாணவர்களை தடுத்த ஆசிரியர்கள்

நாட்டின் 72-வது சுதந்திர தினம் நேற்று விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் சுதந்திர தினத்தையொட்டி கலைநிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றன. உத்தரப்பிரதேச மாநிலம் மஹராஜ்காஞ்ச் என்னும் செயல்பட்டுவரும் மதரசாவிலும் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. அப்போது, தேசிய கீதம் பாடிய மாணவர்களை ஆசிரியர்கள் தடுத்து நிறுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விழாவில், தேசிய கீதம் பாடும் மாணவர்களை மூன்று ஆசிரியர் தடுத்து நிறுத்தியுள்ளனர். 

தேசிய கீதம் பாடும் மாணவர்களை ஆசிரியர்கள் தடுத்து நிறுத்தும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியானது. இதையடுத்து, மாவட்ட நீதிபதி அமர்நாத் உபதயா மாவட்ட சிறுபான்மையினர் அதிகாரி பிரபாத் குமாரிடம் இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க உத்தரவிட்டார். இதன் பின்னர், ஆசிரியர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஓர் ஆசிரியரை போலீஸார் கைது செய்துள்ளனர். மற்ற இரண்டு ஆசிரியர்கள் தலைமறைவாகியுள்ளதாகவும் அவர்களைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.