வெளியிடப்பட்ட நேரம்: 18:37 (16/08/2018)

கடைசி தொடர்பு:19:33 (16/08/2018)

`ஒரு ரத்தினத்தை நாடு இழந்துவிட்டது' - முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்!

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இன்று மாலை உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
 

வாஜ்பாய்

வயது மூப்பின் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இன்று மாலை 5.05 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிறுநீரகத் தொற்று உள்ளிட்ட பிரச்னைகளுக்கு சிகிச்சை எடுத்து வந்த அவர் சிகிச்சை பலனின்றி மறைந்துள்ளார். அவரது மறைவு பா.ஜ.க-வினர் மத்தியில் பெரும் சோகத்தை உண்டாக்கியுள்ளது. அவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்:

வாஜ்பாயின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவர் ஒரு சிறந்த தலைவர். ஆளுமைமிக்க, முதிர்ச்சியான தலைவரை இந்தியா இழந்துவிட்டது.

பிரதமர் மோடி:

வாஜ்பாய் அளித்த உத்வேகம், வழிகாட்டல், ஒவ்வொரு இந்தியருக்கும், பா.ஜ.க-வினருக்கும் இருக்கும். அவரின் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவை குறிக்கிறது. வாஜ்பாய் தேசத்துக்காக வசித்துவந்தவர். அடல் ஜீயின் இறப்பு தனிப்பட்ட முறையில் எனக்கு பெரிய இழப்பு. அவருடன் பயணித்த எண்ணிலடங்கா நினைவுகள் என்னுள் இருக்கிறது. வார்த்தைகள் இன்றி உணர்ச்சி மேலோங்கிய நிலையில் உள்ளேன்.

நடிகர் ரஜினிகாந்த்: 

சிறந்த தலைவரான வாஜ்பாய் மறைவு வேதனையைத் தருகிறது. அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி: 

ஒரு சிறந்த மகனை நாடு இழந்து விட்டது. மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கோடிக்கணக்கான மக்களால் விரும்பப்பட்டவர் மற்றும் மதிக்கப்பட்டவர்.

துணைக் குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடு:

பன்முகத்தன்மை கொண்ட ஒரு ரத்தினத்தை நாடு இழந்துவிட்டது. வாஜ்பாயை இந்தியா நீண்ட காலத்துக்கு நினைவில் வைத்துக்கொள்ளும். மாணவப்பருவத்தில் இருந்தே என்னை கவர்ந்த தலைவர். வாஜ்பாயின் ஆளுமை, கடமையின் மீதான பக்தி, தலைமைப் பண்பு நீண்ட காலத்துக்கு நினைவு கூறப்படும்

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர்:

தனது முழுவாழ்க்கை முழுவதையும் நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் அர்ப்பணித்தவர் வாஜ்பாய். அவரது மறைவின் மூலம் இந்தியா ஒரு மிகப்பெரிய தலைவரை இழந்துள்ளது.

தமிழக முதல்வர் பழனிசாமி:

வாஜ்பாயின் மறைவு இந்தியாவுக்கே பேரிழப்பு. அவரை இழந்து வாடும் பா.ஜ.க-வினர், அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். மூன்று முறை இந்தியாவின் பிரதமராக இருந்த வாஜ்பாய் பா.ஜ.க-வில் இருந்து தேர்வான முதல் பிரதமர். இலக்கியத்தின் மீது ஆர்வம் கொண்ட அவர் சிறந்த பேச்சாளர்.

மைத்ரேயன் எம்.பி:

ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது. இந்தியாவிலேயே மிகப்பெரிய தலைவர் வாஜ்பாய்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்:

வாஜ்பாய் ஒரு மிகச் சிறந்த பேச்சாளர். ஈடு இணையற்ற சேவகராக, சிறந்த பிரதமராக, கவிஞராக திகழ்ந்தவர். அவர் சிறந்த எம்பியாகவும் இருந்தார். அவரது மறைவு வேதனை அளிக்கிறது.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி:

நாட்டின் உச்ச அதிகாரத்தில் இருந்த மிகச்சிறந்த மனிதரை தேசம் இழந்துள்ளது. வலிமையான தலைவரையும், நல்ல மனிதரையும் நாடு இழந்துவிட்டது. 

பாஜக மூத்த தலைவர் அத்வானி:

வாஜ்பாய் மறைவால் தாங்க முடியாத துயரத்தில் உள்ளேன். இந்தியாவின் மிகப்பெரிய தலைவராக விளங்கிய வாஜ்பாய் இழப்பை தெரிவிக்க வார்த்தைகள் இல்லாமல் தவிக்கிறேன். மூத்தவர் என்பதை விட 65 ஆண்டுகளுக்கு மேலாக என் உற்ற தோழனாக தோள் கொடுத்தவர். ஆர்எஸ்எஸ்-ல் தொடங்கி ஜனசங்கம் உருவானது வரை எங்களது பயணத்தை மறக்க முடியாது.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்:

நாட்டில் உள்ள அரசியல்வாதிகளுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்த வாஜ்பாயின் மறைவு வேதனை தருகிறது. வாஜ்பாயின் சேவைகள் என்றும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கும்

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்:

வாஜ்பாய் மறைவு செய்தி மிகுந்த வலியை ஏற்படுத்தியது, மிகச்சிறந்த தலைவரை தேசம் இழந்துள்ளது. வாஜ்பாயின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்படும்.

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

வல்லமை பொருந்திய தலைவர் வாஜ்பாயின் இறப்பு நாட்டிற்கே பேரிழப்பு. 

டிடிவி தினகரன்:

நெடிய அரசியல் வரலாற்றுக்கு சொந்தக்காரராகவும், மிகச்சிறந்த பாராளுமன்றவாதியாகவும், இந்திய நாட்டின் வளர்ச்சியை தன் நோக்கமாக கொண்டு, பல பெருமைகளையும், சிறப்புக்களையும், இந்திய நாட்டிற்கும், இந்திய மக்களுக்கும் பெற்றுத் தந்தவர் வாஜ்பாய். சகோதர நேசத்தை முன்னிறுத்திய மனிதநேயம் கொண்ட மாமனிதர் வாஜ்பாய் இழப்பு இந்திய தேசத்திற்கு பேரிழப்பாகும். 

மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி:

வாஜ்பாய் இந்தியாவின் மிகச்சிறந்த தலைவர் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை, நாட்டிற்கு அவர் அளித்த பங்களிப்பு எந்நாளும் போற்றப்படும்.

ப.சிதம்பரம்:

ஒரு கருணை உள்ளம் கொண்ட கண்ணியமான அரசியல் தலைவரை இந்தியா இழந்துவிட்டது. வாஜ்பாய்க்கு நிறைய நண்பர்கள் இருந்தார்கள் என்பது புதிய செய்தி அல்ல. அவருக்குப் பகைவர்களே இல்லை என்பதுதான் அவருடைய தனிச்சிறப்பு. 

அமித் ஷா:

தேச நலனுக்காக தனது உடலையும், ஆன்மாவையும் ஒரு சேர அர்ப்பணித்தவர் வாஜ்பாய்.

முலாயம் சிங் யாதவ்:

இது நாட்டிற்கு பேரிழப்பு. மூத்த தலைவராக இருந்தாலும் மிகவும் எளிமையாகவே இருந்தார். அவரை பற்றி பெருமை கூட அவர் பேசியது கிடையாது. தற்கால அரசியல் தலைவர்கள், வாஜ்பாயிடம் நிறைய கற்க வேண்டியுள்ளது. 

கவிஞர் வைரமுத்து:

வாஜ்பாய் மறைவால் இந்தியா எழுந்து நின்று அழுகிறது. வாஜ்பாயின் மரணம் என்பது ஒன்றல்ல. ஒரு தலைவருக்கும் ஒரு கவிஞருக்குமென்று இரண்டு மரணங்கள் நேர்ந்திருக்கின்றன. இந்த மாதம் மரணத்திற்கு இலக்கியப் பசி போலும். தெற்கே ஓர் இமயமாகத் திகழ்ந்த கலைஞரையும், வடக்கே ஒரு கடலாகத் திகழ்ந்த வாஜ்பாயையும் ஒரே மாதத்தில் உண்டு முடித்திருக்கிறது.

தேமுதிக நிறுவனர் விஜயகாந்த்:

இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றியவர் வாஜ்பாய். அனைத்துக் கட்சியினராலும் பாராட்டப்பட்ட முக்கியமான பாஜக தலைவர். கார்கில் போர், பொக்ரான் அணுகுண்டு சோதனையை ஆகியவற்றில் வெற்றிகண்டவர். செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியும், மன வேதனையும் அடைந்தேன். 

திமுக செயல் தலைவர் ஸ்டாலின்:

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு பெரிதும் வேதனையடைந்தேன். ஜனநாயகத்தின் பக்கம் நின்று தன் வாழ்நாள் முழுவதும் அயராது போராடிய வாஜ்பாய் அவர்களின் இழப்பு நாட்டிற்கும், பன்முகத்தன்மைக்கும் பேரிழப்பாகும்

அமெரிக்க தூதரகம்:

இந்திய, அமெரிக்க உறவுகளை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றியவர் வாஜ்பாய்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க