கேரளாவை மிரட்டும் கனமழை - உயிரிழந்தோர் எண்ணிக்கை 94 ஆக உயர்வு!

கேரளாவில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 94 பேர் உயிரிழந்துள்ளனர் என மாநில அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

கனமழை

கேரளாவிலிருந்து வெளியாகும் கனமழை செய்திகள் நாளுக்கு நாள் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. ஆகஸ்ட் 9-ம் தேதி ஆரம்பித்த கனமழை விட்டு விட்டு பெய்துகொண்டிருக்கிறது. இதனால் மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் பலத்த சேதத்தைச் சந்தித்துள்ளன. நிலச்சரிவு, அணைகளிலிருந்து வெளியேறும் நீர் என மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் தீவுகளாக மாறியுள்ளன. இதுபோல் கொச்சி, கோழிக்கோடு உள்ளிட்ட விமான நிலையங்களும் முற்றிலுமாக முடங்கியுள்ளன. மீட்புப் பணிகளும் துரிதமாக நடந்து வந்தாலும், தொடர் மழையின் காரணமாக அதில் சுணக்கம் ஏற்பட்டு வருகிறது. பொதுமக்கள் பலரும் உணவின்றி தவித்து வருகின்றனர். ஒரு வாரகாலமாக பெய்து வரும் மழை நேற்றுதான் அதிக சேதத்தை ஏற்படுத்தியது. இதனால் நேற்று மட்டும் 25 பேர் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டதாக அம்மாநில முதல்வர் பினராயி வேதனை தெரிவித்தார்.  

இந்நிலையில், ஒருவார காலமாகப் பெய்து வரும் கனமழைக்குப் பலியானோர் விவரங்களை மாநில அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 94 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 11 பேரை காணவில்லை என்றும், 41 பேர் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் எனவும் மாநில அரசு அறிவித்துள்ளது. இதேபோல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1,65,538 மக்கள் பல்வேறு பகுதிகளில் உள்ள 1,155 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 2,857 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் கேரள அரசு தெரிவித்திருக்கிறது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!