முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது... வதந்திகளை நம்ப வேண்டாம்! - கேரள அரசு அறிக்கை 

'முல்லைப் பெரியாறு அணையில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக வதந்தி பரப்புவோர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என கேரள அரசு எச்சரித்துள்ளது. 

முல்லைப் பெரியாறு அணை

கேரளாவில் கனமழை பெய்துவருவதால் அங்குள்ள 22 அணைகளும் நிரம்பி வருகின்றன. இதையடுத்து நீர் வெளியேற்றப்பட்டும் வருகிறது. இதேபோல, முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால், அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியுள்ளது. இந்நிலையில், அணையில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக சோஷியல் மீடியாக்களில் சிலர் வதந்தி பரப்பினர். இதனால், இடுக்கி மாவட்ட மக்கள் அச்சத்தில் உள்ளனர். 

இதையடுத்து, மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் கேரள அரசு அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டது. அதில், `முல்லைப் பெரியாறு அணைகுறித்து ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வதந்தி பரப்பப்பட்டுவருகிறது. அணை பாதுகாப்பாக உள்ளதால், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. வதந்திகளை நம்ப வேண்டாம். அணைகுறித்த தவறான தகவல்களை சோஷியல் மீடியாக்களில் பரப்பினால், சைபர் க்ரைம் காவல்துறை அதிகாரிகள் கைதுசெய்து, கடும் நடவடிக்கை எடுப்பார்கள்' என அறிக்கையில் கூறியுள்ளது. 

இதற்கு முன்னதாக, ``முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியாகக் குறைக்க வேண்டும். அணையின் நீர்மட்டத்தைக் குறைப்பதில் தமிழக அதிகாரிகள் மெத்தனப்போக்கைக் கடைப்பிடிக்கின்றனர். எவ்வித முன்னறிவிப்புமின்றி அணை நீரைத் திறந்து விடுகின்றனர்" என்று, இடுக்கியைச் சேர்ந்த ரசூல் ஜாய் என்பவர், நேற்று உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அதை விசாரித்த நீதிபதிகள், ``அணை பாதுகாப்பாக இல்லை என்று கற்பனையான வாதங்களை முன்வைக்காதீர்கள். சரியான ஆதாரங்களைத் தாக்கல் செய்யுங்கள்" என்று கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!