வெளியிடப்பட்ட நேரம்: 09:10 (17/08/2018)

கடைசி தொடர்பு:09:10 (17/08/2018)

கேரளாவில் தொடரும் கன மழை - ஆக. 28 வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

கேரளாவில் பெய்துவரும் கன மழையால் அம்மாநில பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் ஆகஸ்ட் 28-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

கேரளா

கேரளாவில், கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாகக் கன மழை கொட்டித்தீர்த்துவருகிறது. இதுவரை பெருவெள்ளம் கண்டிராத மாவட்டங்கள், இந்த ஆண்டு முழுவதும் மூழ்கிப்போயுள்ளன. மின்சாரம், போக்குவரத்து, உணவு, இருப்பிடம் போன்ற அனைத்து அத்தியாவசியத் தேவைகளிலும் சிக்கி கேரளா தவித்துவருகிறது. கேரளாவில் உள்ள 27 அணைகளும் திறந்துவிடப்பட்டுள்ளன. சுமார் 26 வருடங்களுக்குப் பிறகு, இடுக்கி அணையின் 5 மதகுகளும் திறக்கப்பட்டுள்ளன. கேரளாவை வெள்ளம் சூழ்ந்து இரண்டு வாரங்களைக் கடந்துவிட்ட நிலையிலும் தண்ணீரின் அளவு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே உள்ளது. வீடுகளை மூழ்கடிக்கும் அளவுக்கு நீரின் அளவு நாளுக்கு நாள் உயர்ந்துவருகிறது. சில இடங்களில், இடுப்பளவு தண்ணீரிலும் பொதுமக்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியேற மனமில்லாமல் மாடிகளில் வசித்துவருகின்றனர். 

கேரளா மழை பாதிப்புகள்

PhotoCredits : Twitter/@Vijayfanzh

கடந்த 94 வடங்களில் இல்லாத பேரழிவைத் தற்போது கேரளா சந்தித்துவருகிறது. நிலச்சரிவு, மழை, வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்களால் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். அனைத்துப் பகுதிகளிலும் மீட்புப்பணிகளும் நிவாரணப் பணிகளும் முழுவீச்சில் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. கேரளாவின் பிரதான விளை பொருள்களான தென்னை, தேயிலை, ரப்பர் போன்ற அனைத்தும் நீரில் மூழ்கியுள்ளன. 

மழை

PhotoCredits : Twitter/@rajeshpadmar

இந்நிலையில், கேரளாவில் வரும் ஆகஸ்ட் 28-ம் தேதி வரை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கு நடைபெறவிருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.