வெளியிடப்பட்ட நேரம்: 10:00 (17/08/2018)

கடைசி தொடர்பு:10:04 (17/08/2018)

``சிறந்த பேச்சாளர், இலக்கியவாதி” - வாஜ்பாய் உடலுக்கு அஞ்சலிசெலுத்திய முதல்வர் பழனிசாமி பேட்டி

தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம், அமைச்சர் ஜெயக்குமார், மாநிலங்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை உள்ளிட்டவர்கள், வாஜ்பாய் உடலுக்கு அஞ்சலிசெலுத்தினர்.

ராகுல் காந்தி

முன்னாள் பாரதப் பிரதமர் வாஜ்பாய் நேற்று காலமானார். அவரது உடல் தலைவர்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 4 மணிக்கு இறுதிச்சடங்குகள் செய்யப்பட உள்ளன. தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் டெல்லிச் சென்று அவரது உடலுக்கு அஞ்சலிசெலுத்திவருகின்றனர்.  வாஜ்பாய் வீட்டில் பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் உள்ளனர்.

வாஜ்பாய் உடலுக்கு ஸ்டாலின் அஞ்சலி

நேற்றிரவு டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் வாஜ்பாய் உடலுக்கு தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலிசெலுத்தினார். இன்று காலை தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் அமைச்சர் ஜெயக்குமார், மாநிலங்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை உள்ளிட்டவர்கள் வாஜ்பாய் உடலுக்கு அஞ்சலிசெலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, “50 ஆண்டுக் காலம் இரு அவைகளிலும் சிறப்பாகப் பணியாற்றியவர் தலைவர் வாஜ்பாய். சிறந்த பேச்சாளர், நிர்வாகத்திறன் மிக்கவர், இலக்கியவாதி. அவரது மறைவு நாட்டுக்கே பேரிழப்பு” என்றார். 

முதல்வர் பழனிசாமி அஞ்சலி


முன்னதாக, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், கேரள ஆளுநர் சதாசிவம் ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலிசெலுத்தினர். இன்று காலை வாஜ்பாய் உடலுக்கு அஞ்சலிசெலுத்திய பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை, “வளர்ச்சித் திட்டங்களின் நாயகன் வாஜ்பாய். பன்முகத்தன்மை கொண்ட அவரைப் போன்ற தலைவரை இனிமேல் பார்க்க முடியாது. இந்தியாவை வல்லரசாக்க பிள்ளையார்சுழி போட்டவர் வாஜ்பாய் தான்” என்றார். ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ நேரில் சென்று அஞ்செலிசெலுத்தினார். இன்று காலை, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, வாஜ்பாய் உடலுக்கு அஞ்சலிசெலுத்தினார்.