வெளியிடப்பட்ட நேரம்: 11:10 (17/08/2018)

கடைசி தொடர்பு:11:18 (17/08/2018)

பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் வாஜ்பாயின் உடல்! - அஞ்சலிசெலுத்திவரும் பொதுமக்கள்

முன்னாள் பிரதமரும் பா.ஜ.க-வின் மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாய், உடல்நலக் குறைவால் நேற்று மாலை காலமானார். அவரது உடல், ராணுவ வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

வாஜ்பாய்

முன்னாள் பிரதமரும் பா.ஜ.க மூத்த தலைவருமான வாஜ்பாய், வயது மூப்பின் காரணமாக நீண்ட காலமாக அரசியலில் இருந்து விலகி ஓய்வில் இருந்துவந்தார். அவருக்கு சிறுநீரகத்தில் ஏற்பட்ட தொற்று காரணமாகக் கடந்த ஜூன் 11-ம் தேதி, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எய்ம்ஸ் தலைமை மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 5.05 மணிக்கு வாஜ்பாய் உயிரிழந்தார். இதையடுத்து, வாஜ்பாயின் உடல் டெல்லி கிருஷ்ணா மேனன் பார்க்கில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ், பா.ஜ.க தலைவர் அமித் ஷா, பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலிசெலுத்தினர். 

இந்த நிலையில், வாஜ்பாய் இல்லத்திலிருந்து அலங்கரிக்கப்பட்ட ராணுவ ஊர்தியில் அவரது உடல் டெல்லியில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகத்துக்குக் கொண்டுவரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.  பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முக்கிய தலைவர்கள் அஞ்சலிசெலுத்தினர். இதையடுத்து, பொதுமக்கள் அஞ்சலிசெலுத்திவருகின்றனர். வாஜ்பாயின் இறுதி ஊர்வலம் இன்று மதியம் 1.30 மணி முதல் 4 மணி வரையில் நடைபெறும். இறுதிச்சடங்குகள் மாலை 4 மணிக்கு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.