'படகு சிரமமா இருக்கு; கூடுதலாக ஹெலிகாப்டர் வேண்டும்'- மத்திய அரசுக்கு பினராயி வேண்டுகோள்

கேரளாவில், கன மழை பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 167 ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். 

பினராயி விஜயன்
 

கேரளாவில், கசரகோட்டை தவிர அனைத்து மாவட்டங்களுக்கும் ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்னும் இரு தினங்களுக்கு மழை தொடரும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. நிலச்சரிவு மற்றும்  வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 167 ஆக உயர்ந்துள்ளது. 

கன மழை பாதிப்புகுறித்து சற்று முன் ஊடகங்களைச் சந்தித்த கேரள முதல்வர் பினராயி விஜயன்,  `மாநிலம் முழுவதும் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்க 11 ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டுவருகின்றன. மீட்புப் பணிகளுக்கு, மேலும் ஹெலிகாப்டர்கள் வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரியுள்ளோம். செங்கனூர், ஆலுவா உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் சூழப்பட்டுள்ளதால் படகுகளில் மீட்பது சிரமாக உள்ளது.

140-க்கும் மேற்பட்ட படகுகள் மீட்புப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்பட்டுவருகின்றன. உயரமான இடங்களில் சிக்கியுள்ள மக்களை ஹெலிகாப்டர்கள் மூலமாக மட்டுமே மீட்க முடியும். மாநிலம் முழுவதும் மொத்தம் 16 குழுக்களாகப் பிரிந்து ராணுவத்தினர் மீட்புப் பணிகளை மேற்கொண்டுவருகின்றனர். கடந்த 8-ம் தேதியிலிருந்து இதுவரை 164 பேர் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி பலியாகியுள்ளனர். 4,000-த்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். 70 பேர் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களைத் தங்கவைக்க 1,568 முகாம்கள் மாநிலம் முழுவதும் திறக்கப்பட்டுள்ளன. மீட்புப் பணிகள் மேற்கொள்ள மேலும் மத்திய ராணுவப் படையை மத்திய அரசு அனுப்பிவைக்க வேண்டும்” என்றார்.

இந்நிலையில், `கேரளாவுக்குத் தேவையான உதவிகளை மத்திய அரசு செய்துகொடுக்கும். கூடுதல் ஹெலிகாப்டர்கள் வழங்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது’ என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளித்துள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!