வெளியிடப்பட்ட நேரம்: 15:25 (17/08/2018)

கடைசி தொடர்பு:15:25 (17/08/2018)

அணை கண்காணிப்புக் குழுவின் முடிவை ஏற்க வேண்டும் - தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

முல்லைப் பெரியாறு அணை தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில், அணையின் துணை கண்காணிப்புக் குழு எடுக்கும் முடிவுகளைத் தமிழக அரசு ஏற்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்றம்

கேரளாவில் பெய்துவரும் கன மழையால், அங்குள்ள 27 அணைகளும் நிரம்பி, அனைத்து மதகுகளும் திறந்துவிடப்பட்டுள்ளன. இதனால் கேரள மாநிலம் தனித் தீவாக மாறியுள்ளது. இதேபோல, முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீரின் அளவு 16,629 கன அடியாக உள்ளது. தற்போது, அணையின் நீர்மட்டம் 142  அடியை எட்டியுள்ளது.  2,200 கன அடி நீர் அணையிலிருந்து வெளியேற்றப்படுகிறது. இதற்கிடையே, `முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி அளவுக்கு தண்ணீர் இருப்பது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல். எனவே, நீர்மட்டத்தை 139 அடியிலேயே பராமரிக்க வேண்டும்' என கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதினார். இதே கோரிக்கையை வலியுறுத்தி, பிரதமருக்கும் பினராயி விஜயன் கடிதம் எழுதினார். இந்தக் கடிதத்துக்குப் பதிலளித்துள்ள தமிழக முதல்வர், `முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக இருப்பதால் அணையின் நீர்மட்டத்தை குறைக்கத் தேவையில்லை' எனக் கூறியுள்ளார்.  

முல்லை பெரியாறு

இந்நிலையில், `இடுக்கி மாவட்ட மக்கள் பயத்துடனே வாழ்ந்துவருகிறார்கள். முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 138 அடியாகக் குறைக்க வேண்டும். அணை நீரைத் திறந்துவிடுவதில் தமிழக அதிகாரிகள் மெத்தனம் காட்டுகிறார்கள். எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் அணையில் தண்ணீர் திறந்துவிடுகிறார்கள்' எனக் கூறி இடுக்கி பகுதியைச் சேர்ந்த ரசுல் ஜாய் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு, அவசர வழக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு நேற்று விசாரணைக்கு வந்தது.  இந்த வழக்கில் பேசிய நீதிபதிகள், கன மழை பெய்து வருவதால், நீர்மட்டத்தைக் குறைக்க முடியுமா?" என தமிழக அரசுக்குக் கேள்வி எழுப்பியதுடன், `அணை நிலவரம், பாதுகாப்பு, இயற்கைப் பேரிடர் ஆகியவை குறித்து மத்திய, கேரளா, தமிழக அரசு அதிகாரிகள் அடங்கிய அணை துணை கண்காணிப்புக் குழு நாளை அறிக்கை தாக்கல்செய்ய வேண்டும்' எனக் கூறியிருந்தது. 

அதன்படி, இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், ''முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாகக் குறைப்பது குறித்து அணையின் துணை கண்காணிப்புக் குழு மற்றும் தேசியப் பேரிடர் மேலாண்மைக் குழு கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டும். மேலும், அணையின் நீர் மட்டம் குறைப்பது தொடர்பாகக் குழு எடுக்கும் முடிவை தமிழக அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும்'' என்று தீர்ப்பளித்துள்ளனர்.