`நீட் தேர்வால் முடங்கிக் கிடக்கிறோம்!' - மோடிக்குக் கடிதம் எழுதிய ஹைதராபாத் மாணவர் | Hyderabad Student writes letter to PM modi about neet Issue

வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (17/08/2018)

கடைசி தொடர்பு:16:00 (17/08/2018)

`நீட் தேர்வால் முடங்கிக் கிடக்கிறோம்!' - மோடிக்குக் கடிதம் எழுதிய ஹைதராபாத் மாணவர்

நீட் தேர்வு முறையால் மருத்துவக் கனவுகளுடன் உள்ளவர்கள் படும் துன்பங்களைப் பற்றி ஹைதராபாத் மாணவர் ஒருவர் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். 

மோடி

ஹைதராபாத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர், நீட் தேர்வில் 720 மதிப்பெண்ணுக்கு 480 பெற்றுள்ளார். இவர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘நீட் தேர்வின் முக்கிய நோக்கம் மாணவர்களின் மனஅழுத்தம் மற்றும் நிதி சுமையைக் குறைப்பதுதான். இதன் மூலம் தகுதியான மாணவர்கள் மட்டுமே மருத்துவம் பயில முடியும் எனவும் கல்லூரிகள் கட்டண கொள்ளையைத் தடுக்க முடியும் என்பது பிரதான வாதமாக உள்ளது. ஆனால், இவை எதுவும் தற்போது பின்பற்றப்படுவதில்லை. 

நீட் தேர்வில் தகுதி பெறுவதற்கு 150-க்கும் குறைவான மதிப்பெண் எடுத்தாலே தனியார் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் படிக்க இடம் கிடைத்துவிடுகிறது. ஆனால், சில மாணவர்கள் நிறைவான மதிப்பெண் எடுத்தும் ஒரே ஒரு மதிப்பெண் வித்தியாசத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்காமல் அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் கல்லூரிகளைத் தேர்ந்தெடுக்கப்படும் கட்டாயத்துக்குத் தள்ளப்படுகிறோம். 

குறைவான மதிப்பெண் பெற்றாலும் பணத்தின் உதவியால் மருத்துவக் கல்லூரிகளில் நுழையும் மாணவர்கள் எப்படி சிறந்த மருத்துவர்களாக வருவார்கள்? தனியார் கல்லூரியில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணத்தைச் செலுத்த முடியாத மாணவர்கள் வீட்டில்தான் முடங்க வேண்டுமா? கையளவு மட்டுமே உள்ள இடங்களுக்கு 13 - 14 லட்ச மாணவர்கள் விண்ணப்பிக்கின்றனர். மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகிவிடக் கூடாது' எனக் கடிதத்தில் ஆதங்கப்பட்டுள்ளார்.