வெளியிடப்பட்ட நேரம்: 19:02 (17/08/2018)

கடைசி தொடர்பு:19:02 (17/08/2018)

சந்தையில் மீண்டும் உற்சாகம் ; புதிய உயரத்தில் நிஃப்டி - 17-08-2018

நேற்றைய தினம் அமெரிக்க சந்தையின் குறிப்பிடத்தக்க ஏற்றத்திற்குப் பின், ஆசிய சந்தைகள் பாசிட்டிவாக துவங்கியதால், இந்திய சந்தையிலும் இன்று மேன்மையான துவக்கம் இருந்தது. தொடர்ந்து பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டியதால், சந்தை இன்று முழுதும் பாசிட்டிவ் திசையிலேயே பயணித்து நல்ல லாபத்துடன் நிறைவுற்றது.

மும்பை பங்குச் சந்தையின் முக்கிய குறியீடான சென்செக்ஸ் 284.32 புள்ளிகள் அதாவது 0.75 சதவிகிதம் உயர்ந்து 37,947.88 என முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 85.70 புள்ளிகள் அதாவது 0.75 சதவிகிதம் உயர்ந்து 11,470.75 என புதிய உச்சத்தில் நிறைவுற்றது.

சீன நாட்டின் வர்த்தக அமைச்சக துணை அமைச்சர் தலைமையிலான குழுவுடன் இந்த வார  இறுதியில் அமெரிக்க ட்ரெஷரி செக்ரட்டரியுடன் நடத்தவிருக்கும் பேச்சு வார்த்தை வர்த்தக பூசலை சற்றேனும் குறைக்க உதவும் என்ற நம்பிக்கையில் முதலீட்டாளர்கள் செயல்பட்டதால் ஆசிய சந்தைகள் இன்று பெரும்பாலும் முன்னேற்றம் கண்டன.  

இருப்பினும், துருக்கி நாட்டின் பண நெருக்கடி மற்றும் அமெரிக்க - சீன வர்த்தக யுத்தம் தீருமா தீராத என்ற ஐயம் காரணமாக ஐரோப்பியச் சந்தைகளில் இன்று ஓர் இறுக்கமான நிலையே காணப்பட்டது.

இந்தியச் சந்தையைப் பொறுத்தவரையில், சில சிறப்பான காலாண்டு செயல்பாடு பற்றிய அறிக்கைகளும், வளர்ந்து வரும் சந்தைகளில் இந்தியச் சந்தையின் போக்கு நன்கு பாசிட்டிவாக இருக்கும் என்று வரும் அறிக்கைகளும் சந்தையின் உற்சாக மனநிலைக்குக் காரணமாயின.

மேலும், அதிகரித்து வரும் அந்நிய முதலீடுகள், மற்றும் அமெரிக்க - சீனப் பேச்சு வார்த்தை இறுக்க நிலையை மாற்றும் என்ற நம்பிக்கையும் சந்தையின் உயர்வுக்கு உதவியது எனலாம்.

வங்கி, மருத்துவம், உலோகம் மற்றும் எப்.எம்.சி.ஜி துறை பங்குகள் நல்ல முன்னேற்றம் கண்டன.  கேப்பிடல் கூட்ஸ், ரியல் எஸ்டேட் மற்றும் பவர் துறை சார்ந்த பங்குகள் சிலவும் லாபம் கண்டன.

இன்று விலை அதிகரித்த பங்குகள் :
க்ராஸிம் இண்டஸ்ட்ரீஸ் 4.5%
யெஸ் பேங்க் 3.75%
லூப்பின் 3.5%
ஸ்டேட் பேங்க் 3.2%
வேதாந்தா 3.1%
டெக் மஹிந்திரா 3%
ஹிந்துஸ்தான் யூனிலீவர் 2.6% 
டாடா மோட்டார்ஸ் 2.5%
ஐ.டி.சி 2.3%
டாடா ஸ்டீல் 2.2%
ஐ.சி.ஐ.சி.ஐ.பேங்க் 1.7%
அல்ட்ராடெக் சிமென்ட் 1.6%
HDIL 110/5%


இன்று மும்பை பங்குச் சந்தையில்1633 பங்குகள் லாபத்துடன் முடிந்தன. 1072 பங்குகள் விலை சரிந்தும், 157 பங்குகள் முந்தைய தினத்தின் விலைகளிலிருந்து மாற்றமில்லாமலும் முடிந்தன.