வெளியிடப்பட்ட நேரம்: 18:35 (17/08/2018)

கடைசி தொடர்பு:18:36 (17/08/2018)

`100 ஆண்டுகளில் இல்லாத பேரழிவு; மழை பாதிப்புகளால் 324 பேர் உயிரிழப்பு!’ - கேரள முதல்வர் வேதனை

கேரளாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கிப் பலியானோர் எண்ணிக்கை 324 ஆக உயர்ந்துள்ளதாக முதல்வர் பினராயி விஜயனின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை

கடந்த 100 ஆண்டுகளில் சந்திக்காத துயரத்தை அண்டை மாநிலமான கேரளா சந்தித்து வருகிறது. ஆண்டுதோறும் வழக்கம்போல் பெய்யும் தென்மேற்குப் பருவ மழை, இந்த ஆண்டு கனமழையாகக் கொட்டி கேரளாவில் பெரும் சோகத்தை உண்டாக்கியுள்ளது. ஆகஸ்ட் 9-ம் தேதி தொடங்கிய பருவமழை விடாமல் பெய்து வருகிறது. இதனால், மாநிலம் முழுவதும் தீவுகளாக மாறியுள்ளதுடன் அணைகள் அனைத்தும் நிரம்பி, அவற்றின் அனைத்து மதகுகளும் திறக்கப்பட்டுள்ளன. கொச்சி, ஆலப்புழா, கோழிக்கோடு, மலப்புரம் என மாநிலத்தின் அனைத்து நகரங்களும் வெள்ள நீரில் மிதக்கின்றன. பெரும்பாலான மாவட்டங்களுக்குத் திரும்பத் திரும்ப ரெட் அலர்ட் விடப்பட்டு வருகின்றது. 

இதற்கிடையே மழை, வெள்ளத்தில் சிக்கி 167 பேர் பலியானதாக மாநில அரசு இன்று அறிவித்திருந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை மேலும் உயர்ந்துள்ளது என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ``கனமழை, வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்டவை சிக்கி இதுவரை 324 பேர் உயிரிழந்துள்ளனர். இது கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத பேரழிவு. மொத்தம் 80 அணைகள் திறக்கப்பட்டுள்ளன. 2,20,000-க்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீங்கள் உதவுவதன் மூலம் அவர்களை மீள்குடியமர்த்த முடியும்" என்று பதிவிட்டுள்ளார். இந்தத் தகவல் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மூன்று நாள்களாகப் பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க