`கேரளா சென்றும் மக்களைச் சந்திக்க முடியவில்லை!’ - 16 டன் அரிசி வழங்கிய அ.தி.மு.க எம்.எல்.ஏ நெகிழ்ச்சி #KeralaFloods

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 16,000 கிலோ அரசி வழங்கியுள்ளார் எம்.எல்.ஏ ஆறுகுட்டி. வெள்ளத்தின் காரணமாக மக்களைச் சந்திக்க முடியாதது வேதனை அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

கேரளா வெள்ளம்

இயற்கையின் கோரதாண்டவத்துக்குப் பலியாகியுள்ளது கேரளம். இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப் போய் கிடக்கின்றனர் அப்பகுதி மக்கள். உணவு, உடை உள்ளிட்ட அனைத்தையும் இழந்து நிற்கதியாய் நிற்கும் அம்மக்களுக்குப் பல்வேறு தரப்பிலிருந்து உதவிக் கரங்கள் நீண்டு கொண்டுள்ளன. அந்த வகையில் கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 16,000 கிலோ அரிசி வழங்கியுள்ளார் கோவை கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி. இதுகுறித்து அவரிடம் பேசினோம், `ஒரே நாளில் எடுக்கப்பட்ட முடிவு இது. இரவு 12 மணி அளவில் கோயம்புத்தூரிலிருந்து 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 16,000 கிலோ அரிசியை லாரியில் ஏற்றி அனுப்பினோம். அந்த லாரி இன்று காலையில் கேரளா சென்று சேர்ந்தது. நாங்கள் 50 பேர் இங்கிருந்து நள்ளிரவு 3 மணி அளவில் புறப்பட்டு கேரளா சென்றோம். அங்கிருந்த எர்ணாகுளம் கலெக்டரை சந்தித்தோம். அவர் தொடுபுழா பகுதியில் உள்ள மக்கள் வெள்ளத்தால் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாகக் கூறி, உதவ வந்த எங்களுக்கு நன்றி தெரிவித்தார்.

பின்னர் தொடுபுழா தாசில்தாரை சந்தித்து 16,000 கிலோ அரிசியை ஒப்படைத்தோம். அப்பகுதிக்குச் சென்று மக்களை நேரில் சந்திக்க வேண்டும் என்று கோரினேன். ஆனால், அப்பகுதியில் செல்ல முடியாது என்று அவர் தெரிவித்துவிட்டதால் மக்களைப் பார்க்க முடியவில்லை. ஊருக்கு வந்தபின், இப்பகுதியில் உள்ள மக்களிடம் கேரளாவுக்கு உங்களால் முடிந்ததைச் செய்து உதவுங்கள், போக்குவரத்து வசதியை நான் ஏற்பாடு செய்து தருகிறேன் என்று கோரிக்கை வைத்தேன். அதன்படி நாளை கோவையிலிருந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான பொருள்களை அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது. சுனாமி வந்தபோதும் 6 லட்சம் மதிப்புள்ள பொருள்களை பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கொடுத்தேன். சென்னையை உலுக்கிய தானே புயல் பாதிப்பு ஏற்பட்டபோது, 10,000 லிட்டர் கொள்ளவு கொண்ட 2 டேங்கர் லாரியில் பால் கொண்டு சென்றேன். மேலும் 5,000 பேருக்கு சாப்பாடு வழங்கினேன். இயற்கை பேரிடர் ஏற்பட்டால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வது என் வழக்கம். மற்றபடி விளம்பரத்துக்காக எதையும் செய்வதில்லை' என்று விவரித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!