கேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.25 கோடி! - தெலங்கானா முதல்வர் அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்துக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ25 கோடி வழங்குவதாக தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார். 

சந்திர சேகர் ராவ்

கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்ததையடுத்து மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக மாநிலத்தின் அனைத்து அணைகளும் நிரம்பியது. பாதுகாப்பு கருதி அணைகளிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது. மழை மற்றும் அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட நீரால் கேரள மாநிலமே வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிரிழப்பு சம்பவம் அதிகரித்துள்ளது. மழையின் காரணமாக 324 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மத்திய மற்றும் மாநில அரசுகள் கேரளாவுக்கு உதவிக்கரம் நீட்டி வருகிறது.

இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்துக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ. 25 கோடி வழங்குவதாக தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார். கேரள அரசுக்கு இந்தத் தொகையை உடனடியாக வழங்குவதற்குத் தலைமைச் செயலாளர் எஸ்.கே.ஜோஷிக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும், வெள்ளம் காரணமாக நீர் மாசடைந்திருக்கும் என்பதால், ரூ.2.5 கோடி மதிப்புள்ள நீர் சுத்திகரிப்பு கருவிகளைக் கேரளாவுக்கு அனுப்பி வைக்குமாறு அம்மாநில அதிகாரிகளிடம் அறிவுறுத்தியுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!