கேரளா வந்தடைந்தார் பிரதமர் மோடி

கேரளாவில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கால் அம்மாநில மக்கள் பெரும் துயரத்துக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிட கேரளாவுக்கு வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி. 

பிரதமர் நரேந்திர மோடி

தென்மேற்குப் பருவமழையால் கேரளாவில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாகக் கனமழை கொட்டித் தீர்த்தது. தொடர்ந்து பெய்துவரும் மழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். பலர் வீடுகளையும் உடைமைகளையும் இழந்துள்ளனர். இதனால், கேரளாவின் முகம் இப்போது வேறு விதமாக மாறியிருக்கிறது. வெள்ளப் பாதிப்புக்கு இதுவரை 324 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 

பல்வேறு பகுதிகளில் மீட்கப்பட்ட ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பாக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து வெள்ளத்தில் சிக்கியுள்ளோரை மீட்கும் பணியில் தேசியப் பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். கடுமையான வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் பல இடங்களில் பொதுமக்களை மீட்கும் பணியில் சற்று பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. 

இந்நிலையில், வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிட பிரதமர் நரேந்திர மோடி, நேற்று இரவு திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு வந்தடைந்தார். அவரை, கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் ஆளுநர் சதாசிவம், மத்திய அமைச்சர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் வரவேற்றனர். வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளைத் தனி விமானம் மூலம் இன்று பார்வையிட உள்ளார் மோடி. அதற்கான விசேஷ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து அம்மாநில முதல்வர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!