கேரளாவில் தொடர்ந்து அதிகரிக்கும் உயிரிழப்புகள் - மீட்புப் பணிகளில் அசத்தும் முப்படை வீரர்கள்!

கேரளாவில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவின் காரணமாக நேற்று ஒரே நாளில் மட்டும் 106 பேர் இறந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

 

கேரளாவில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவு வெள்ளம் பாதித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். உணவு, உடை, தங்கும் இடமில்லாமல் தவித்து வருகின்றனர். மாநிலத்தின் பல மாவட்டங்கள் பேரழிவைச் சந்தித்துள்ளன. அங்குள்ள 80 அணைகளில் இருந்தும் தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளதால் கேரளாவுக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே உள்ளது. பல லட்சக்கணக்கான மக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பல ஆயிரக்கணக்கானவர்கள் வெள்ளம் சூழ்ந்த வீடுகளுக்குள்ளேயே முடங்கி அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்து வருகின்றனர். அவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவுடன் முப்படை வீரர்களும் இணைந்துள்ளனர்.

Photo Credits : Twitter/@Faridoon Shahryar

வெள்ளம், நிலச்சரிவு போன்ற பேரிடர்களால் தரைவழிப் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. எனவே, ராணுவ ஹெலிக்காப்டர் மூலம் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கேரளாவில் மீட்புப் படை வீரர்களின் உதவிகள் மிகவும் அளப்பரியதாக உள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு வான்வழியாகச் சென்று உரிய நேரத்தில் பல உயிர்களைக் காப்பாற்றி வருகின்றனர். நேற்று நிறைமாத கர்ப்பிணியை ஹெலிகாப்டர் மூலம் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவருக்குக் குழந்தை பிறந்துள்ளது. மேலும், நகரங்களிலிருந்து துண்டிக்கப்பட்ட கிராமங்களில் மரங்கள் மூலம் செயற்கைப் பாலம் அமைத்து நூற்றுக்கணக்கான மக்களை மீட்டுள்ளனர். ரப்பர் படகுகள் மட்டுமல்லாது தங்கள் கைகளில் கிடைக்கும் அனைத்துப் பொருள்கள் கொண்டும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் கேரள மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் மற்றும் நிதியுதவிகள் தொடர்ந்து வந்துகொண்டே உள்ளன. 

இந்நிலையில், நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 106 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி முதல் இதுவரை 324 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதையடுத்து, இன்று காலை இடுக்கி மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவால் வீடு இடிந்து அதில் இருந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் மட்டும் தொடர்ந்து 10 இடங்களில் தொடர் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!