மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் சொத்து மதிப்பு பல எம்.எல்.ஏக்களை விட குறைவு! | atal bihari vajpayee assets

வெளியிடப்பட்ட நேரம்: 11:45 (18/08/2018)

கடைசி தொடர்பு:12:37 (18/08/2018)

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் சொத்து மதிப்பு பல எம்.எல்.ஏக்களை விட குறைவு!

ந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் நேற்று டெல்லியில் தகனம் செய்யப்பட்டது. இந்திய பிரதமர்களில் குறைந்த சொத்து மதிப்பு கொண்டவர்களில் வாஜ்பாயும் ஒருவர். 2004ம் ஆண்டின் கணக்குப்படி, அவரின் மொத்த சொத்து மதிப்பு ரூ.58,00,000 தான். டெல்லி கிழக்கு கைலாஷ் பகுதியில் எஸ்.பி.எஸ் அப்பார்ட்மென்டில் வாஜ்பாய்க்குச் சொந்தமாக பிளாட் ஒன்று உள்ளது. இதன் மதிப்பு ரூ.22 லட்சம். மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் பரம்பரை வீட்டில் ரூ.6,00,000 மதிப்புக்குப் பங்கு உள்ளது. டெல்லி எஸ்.பி.ஐ வங்கியில் ரூ.3,82,886.42 சேமிப்பாக வைத்துள்ளார். இதே வங்கியில் உள்ள மற்றொரு கணக்கில் ரூ.25,75,562.50 டெபாசிட் செய்துள்ளார். இதுதவிர சேமிப்புப் பத்திரங்கள் ரூ.1,20,782 மதிப்புக்கு வைத்துள்ளார். இவற்றின் மொத்தம் ரூ.58,00,000 தான். கடந்த 2004-ம் ஆண்டு லக்னோ நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டபோது வேட்பு மனுத்தாக்கலின்போது வாஜ்பாய் அளித்த சொத்து மதிப்பு விவரம் இது. இப்போது இந்தச் சொத்து மதிப்பு சற்றே உயர்ந்திருந்தாலும், கோடிக் கணக்கில் சொத்துகளைக் குவித்து வைத்திருக்கும் எம்.எல்.ஏ.க்களைவிட இது நிச்சயம் குறைவுதான். அது மட்டுமின்றி, வாஜ்பாய் மூன்று முறை பிரதமராக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாஜ்பாய் கோவில்

இதனிடையே, வாஜ்பாயின் சொந்த நகரான குவாலியரில் அவருக்கு எழுப்பப்பட்டுள்ள கோயில் குறித்தும் தெரிந்து கொள்வோம். இந்தக் கோயில் 13 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. குவாலியரில் கவிதைகள் எழுதுவதற்காக சத்தியநாராயன் தெக்ரி என்ற பகுதிக்கு வாஜ்பாய் அடிக்கடி செல்வார். இதையடுத்து, அந்தப் பகுதியிலேயே அவருக்குக் கோயில் கட்ட முடிவு செய்து வாஜ்பாயிடம் அனுமதி கேட்டனர். முதலில் மறுத்த வாஜ்பாய் மக்களின் அன்புக்குக் கட்டுப்பட்டு கோயில் எழுப்ப ஒப்புக்கொண்டார். அதேவேளையில் இரு நிபந்தனைகளும் விதித்தார். கோயிலும் தன் சிலையும் சிறிய அளவில்தான் இருக்க வேண்டும் என்று இரு நிபந்தனைகளுடன் கோயில் எழுப்ப ஒப்புக்கொண்டார். இந்தக் கோயிலில் வாஜ்பாய் எழுதிய கவிதைகளால் தினமும் பூஜை நடத்தப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க