`கேரளாவில் பேரழிவு மிகவும் கவலையளிக்கிறது..!' - ஐ.நா பொதுச் செயலாளர் வேதனை

கேரள பேரழிவை மிக உன்னிப்பாக ஐ.நா கண்காணித்து வருவதாகவும், பேரழிவு மிகவும் கவலையடைய வைக்கிறது எனவும் ஐ.நா தெரிவித்துள்ளது. 

கேரளாவில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வரலாறு காணாத மழை கொட்டித் தீர்த்து வருகிறது. கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் தங்களது உடைமைகளை இழந்து கண்ணீரிலும் தண்ணீரிலும் மக்கள் தத்தளித்து வருகின்றனர். அண்டை மாநிலங்கள் உட்பட உலக நாடுகளும் கேரளாவுக்கு உதவிக் கரம்கொடுக்க முன்வந்துள்ளது. பாலக்காடு, கோழிக்கோடு, வயநாடு, இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தால் பலத்த சேதம் அடைந்துள்ளது. ராணுவம், கடற்படை, விமானப் படை ஆகிய முப்படை வீரர்களும் மீட்பு நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இருப்பினும், இடைவிடாது பெய்துவரும் மழையால் சில இடங்களில் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி இதுவரையிலும் 324 பேர் உயிரிழந்ததாக அதிகாரபூர்வமாக முதல்வர் பினராயி விஜயன் நேற்று தெரிவித்தார். எனினும், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. பல பேரை காணவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. 

இந்த நிலையில், `கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் கேரளாவில் வெள்ளத்தால் உயிரிழப்புகள் அதிகமாக உள்ளது. அதேவேளையில் சேதமும் அதிகரித்துள்ளது. கேரள பேரழிவு மிகவும் கவலையடைய வைக்கிறது' என ஐ.நா-வின் பொதுச் செயலாளர் அண்டோனியோ கடெர்ரெஸ் தெரிவித்ததாக அவரது செய்தி தொடர்பாளர் ஸ்டெபானி டுஜாரிக் தெரிவித்தார். மேலும், `கேரளாவின் நிலை குறித்து உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது ஐ.நா' என்றவரிடம், கேரளா பாதிப்புக்காக ஐ.நா-விடம் இந்தியா உதவி கேட்டுள்ளதா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. `எந்தவிதமான உதவியும் இந்தியா இதுவரையிலும் கோரவில்லை. இயற்கைப் பேரழிவுகளை சமாளிக்க இந்தியாவிடம் அனைத்துத் திறன்களும் உள்ளது' எனக் கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!