மொத்த இழப்பு ரூ.19,512 கோடி; முதல்கட்டமாகப் பினராயி கேட்டது ரூ.2,000 கோடி; பிரதமர் கொடுத்தது ரூ.500 கோடி

வெள்ளச் சேதங்களைப் பார்வையிடுவதற்காகத் திருவனந்தபுரம் சென்ற பிரதமர் மோடி மோசமான வானிலை காரணமாக ஆய்வு செய்ய முடியாத நிலையில் சிறிய ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு தன் ஆய்வைத் தொடங்கினார்

.மோடி

கேரளாவை புரட்டிப்போட்டுள்ள வெள்ளம் 100 ஆண்டிகளில் இல்லாத அளவு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்திருந்தார். அங்குள்ள 80 அணைகள் திறக்கப்பட்டுள்ளதால் கேரளாவுக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே உள்ளது. இதுவரை 324 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 2,23,139 பேர் 1,500-க்கும் அதிகமான முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் பினராயி விஜயன் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். மேலும், வெள்ளத்தில் சிக்கியிருக்கும் பல லட்சக்கணக்கான மக்களை மீட்கும் பணிகள் இரவு பகலாகத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தேசிய பேரிடர் மீட்புக் குழுவினருடன் முப்படைகளும் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 

இந்தநிலையில் கேரளாவில் வெள்ளம் பாதிக்கப்பட்டுள்ள இடங்களை நேரில் பார்வையிட நேற்று இரவு திருவனந்தபுரம் வந்தார் பிரதமர் மோடி. அவரைக் கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் நேரில் சென்று வரவேற்றனர். இதையடுத்து இன்று காலை திருவனந்தபுரத்தில் இருந்து கொச்சி வந்த பிரதமர், அங்கு பெய்யும் கனமழை காரணமாக வெள்ளச் சேதங்களைப் பார்வையிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மோசமான வானிலையால் மோடிக்காக அனுப்பப்பட்டிருந்த ஹெலிகாப்டர் திருப்பி அனுப்பப்பட்டது. 

பின்னர் கொச்சியில் வெள்ள நிவாரணங்கள் குறித்த ஆலோசனையில் மோடி ஈடுபட்டார். இந்தக் கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆளுநர் சதாசிவம், மத்திய இணை அமைச்சர் கே.ஜே அல்ஃபோன்ஸ், முப்படை அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் கேரளாவுக்கு இடைக்கால நிதியாக ரூ.500 கோடி அறிவித்துள்ளார் பிரதமர் மோடி. மேலும், வெள்ளச் சேதங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு  தலா ரூ. 2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து வானிலை சற்று சீரானதால் மீண்டும் வெள்ளச் சேத பகுதிகளைப் பார்வையிட்டு வருகிறார் பிரதமர்.

கேரளாவில் 20,000 கோடி அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசிடமிருந்து இடைக்கால நிதியாக ரூ. 2,000 கோடி கேட்டிருந்தார் பினராயி விஜயன். ஆனால், பிரதமர் ரூ.500 கோடி அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!