‘தேசியப் பேரிடராக அறிவியுங்கள் பிரதமரே’- கேரளாவுக்காகக் குரல் கொடுக்கும் ராகுல் காந்தி | declare Kerala floods a National Disaster says rahul gandhi

வெளியிடப்பட்ட நேரம்: 13:45 (18/08/2018)

கடைசி தொடர்பு:13:45 (18/08/2018)

‘தேசியப் பேரிடராக அறிவியுங்கள் பிரதமரே’- கேரளாவுக்காகக் குரல் கொடுக்கும் ராகுல் காந்தி

கேரளாவின் பாதிப்புகளை உடனடியாக தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

ராகுல்

கேரளாவில் வரலாறு காணாத வெள்ளத்தில் சிக்கி அம்மாநில மக்கள் தவித்து வருகின்றனர். இதுவரை வெள்ளநீரைக் கண்ணால்கூட பார்க்காத மாவட்டங்களிலும் இந்த ஆண்டும் வெள்ளம் புகுந்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழை, 80 அணைகளிலிருந்து திறக்கப்பட்ட நீர் ஆகிய அனைத்தும் கேரளாவை மூழ்கடித்துள்ளது. 10 நாள்களாகப் பெய்து வரும் மழையினால் கேரளா பேரிழப்பைச் சந்தித்துள்ளது. இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் சுமார் 1,500 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. கேரளாவின் வெள்ளச் சேதம் ரூ.20,000 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. மத்திய அரசிடமிருந்து இடைக்கால நிதியாக ரூ.500 கோடி அறிவித்துள்ளார் பிரதமர் மோடி. 

இந்த நிலையில், கேரள பாதிப்புகளைத் தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார். இதுபற்றி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ``அன்புள்ள பிரதமரே, தயவுசெய்து கேரள வெள்ளத்தை உடனடியாக தேசிய பேரிடராக அறிவியுங்கள். லட்சக்கணக்கானோரின் வாழ்க்கை, வாழ்வாதாரங்கள் மற்றும் எதிர்காலம் ஆகியவை ஆபத்தில் உள்ளன” என பதிவிட்டுள்ளார்.