வெளியிடப்பட்ட நேரம்: 15:35 (18/08/2018)

கடைசி தொடர்பு:15:35 (18/08/2018)

மீட்புப் பணியின்போது கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்த கம்யூனிஸ்ட் தலைவர்!

கேரளாவின் ஆலப்புழா இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சந்திரன் வெள்ள மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருக்கும்போது தவறுதலாகக் கால்வாயில் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிபிஐ

PhotoCredits : Twitter/@globalfloods_eu 

கேரளாவில் பெய்து வரும் கனமழையால் லட்சக்கணக்கானவர்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இரவு பகலாகத் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. முப்படை வீரர்களும் மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் தேசியப் பேரிடர் மீட்புக் குழு மற்றும் அம்மாநில மீனவர்களும் இணைந்துள்ளனர். இவர்கள் மட்டுமல்லாது கேரளாவில் உள்ள பல இளைஞர் அமைப்புகள், தன்னார்வலர்கள் எனப் பலர் தாமாக முன்வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதே போன்று அம்மாநிலத்தில் உள்ள இந்திய மார்க்ஸிஸ்ட் கட்சியின் தலைவர் டி.எஸ்.சந்திரன் மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்துள்ளார். 

கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த இடங்களிலிருந்து மீட்கப்பட்ட மக்கள் அங்குள்ள காஞ்சிபடம் என்ற முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சந்திரன் மற்றும் அவரின் குடும்பத்தினரும் அதே முகாமில் தங்கியுள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு வெளியிலிருந்து நிவாரணப் பொருள்களைக் கொண்டுவருவதற்காகச் சென்ற சந்திரன் நீண்ட நேரமாகியும் முகாமுக்கு வரவில்லை. பின்னர், அவரைத் தேடி சிலர் சென்று பார்த்தபோது சந்திரன் கால்வாயில் விழுந்துகிடந்தார். அவரை மீட்டுப் பரிசோதித்தபோது அவர் இறந்துவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மின்சாரங்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் இரவு நேரத்தில் வெளியில் சென்றதால் தடுமாறி கால்வாயில் விழுந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. சந்திரன் வடக்கு ஆலப்புழா பகுதியில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்தவர். அந்தப் பகுதியில் கடந்த ஒருவாரமாக அனைத்து வித உதவிகளையும் செய்துவந்துள்ளார். வெள்ளம், மழைக்கு நடுவில் இவரது எதிர்பாராத மறைவு அப்பகுதியில் கூடுதல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.