‘இன்னும் அதிக படகுகளும் ஹெலிகாப்டர்களும் வேண்டும்’ - வேண்டுகோள் விடுக்கும் கேரள முதல்வர்

'இன்னும் அதிகமான படகுகளும் ஹெலிகாப்டர்களும் கேரளாவுக்கு அனுப்பிவைக்க வேண்டும்' என மத்திய அரசுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கேரள முதல்வர்

கேரளாவில், ஒரு பக்கம் கன மழை வெளுத்துவாங்கிவருகிறது. மற்றொரு புறம் அணைகளில் இருந்து திறக்கப்பட்ட நீரும் சேர்ந்து கேரள மாநிலம் முழுவதையும் வெள்ளக்காடாக்கியுள்ளது. தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்றபோதிலும், பல இடங்களில் நிலச்சரிவு, வெள்ளம் போன்ற காரணங்களாலும், மோசமான வானிலை காரணமாகவும் பல இடங்களில் சிக்கியிருக்கும் மக்களை மீட்க முடியாத நிலையே உள்ளது.

பல மாநிலங்களில் இருந்தும் கேரளாவுக்காக நிவாரண உதவிகள் குவிந்துவருகின்றன. தன்னார்வலர்கள், திரைப் பிரபலங்கள், பல மாநில அரசுகள், பொதுமக்கள் என அனைவரும் கேரளாவுக்கு உதவிக்கரம் நீட்டிவருகின்றனர். அஸ்ஸாம் மற்றும் ஹரியானா அரசுகள் தலா 10 கோடி ரூபாயும், ஒடிஷா அரசு 5 கோடி ரூபாயும் கேரளாவுக்கு நிதியுதவியாக அறிவித்துள்ளன. இன்று காலை, கேரளாவில் வெள்ளச் சேத பகுதிகளைப் பார்வையிட்ட பிரதமர் மோடி, அம்மாநிலத்துக்கு இடைக்கால நிதியாக ரூ.500 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளார். மேலும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா இரண்டு லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், “ கேரளாவின் முதல்கட்ட நிலையை அறிந்துகொள்ள பிரதமர் வான்வழியாக ஆய்வுசெய்தார். மோசமான வானிலை காரணமாக பல இடங்களுக்கு எங்களால் செல்ல முடியவில்லை. இடைக்கால நிதியாக பிரதமர் 500 கோடி ரூபாய் அறிவித்துள்ளார். மேலும், அனைத்து வித உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாக உறுதியளித்துள்ளார். அவருக்கு எங்கள் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். கேரளாவுக்கு இன்னும் அதிகமான படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் வேண்டும் என அவரிடம் கேட்டுள்ளோம்” என முதல்வர் தெரிவித்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!