`வளர்ப்புப் பிராணிகள் இல்லாமல் வர முடியாது!’ - மீட்புக் குழுவினருடன் செல்ல மறுத்த கேரளப் பெண்

கேரளாவில், இரவு பகல் பாராமல் நடந்துவரும் மீட்புப் பணிகளுக்கிடையே, சுவாரஸ்யமான சம்பவங்களும் நிகழ்ந்துவருகின்றன. 

கேரளா

Photo Credit -twitter/@NDRFHQ

கேரளாவில், கடந்த 9-ம் தேதி தொடங்கிய பருவமழை தீவிரமடைந்ததால், இடுக்கி உள்ளிட்ட அணைகளின் மதகுகள் திறக்கப்பட்டன. இடைவிடாது பெய்துவரும் கன மழையால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. முக்கியச் சாலைகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளன. மேலும், 11 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்து, பல பகுதிகள் சிறுசிறு தீவுபோல் காட்சியளிக்கின்றன. மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடந்துவருகிறது.

இதேபோல, திருச்சூர் மாவட்டத்தில் இன்று மீட்புப் பணி தீவிரமாக நடந்துவருகிறது. பெரும்பாலான வீடுகளில் வெள்ளநீர் புகுந்ததால், மார்பளவுத் தண்ணீரில் மக்கள் வீடுகளில் தத்தளித்தனர். அதனால், மீட்புக் குழுவினர் முழுவீச்சில் செயல்பட்டு, படகுகள் மூலம் பெண்கள், குழந்தைகளை மீட்டு வருகின்றனர். இதனிடையே, அப்பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் மட்டும் மீட்புக் குழுவினருடன் வர மறுத்துள்ளார். 

இதுகுறித்து ஹியூமன் சொசைட்டி இன்டர்நேஷனல் அமைப்பைச் சேர்ந்த சாலி வர்மா கூறுகையில், `'திருச்சூர் பகுதியில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சுனிதா என்ற பெண் மீட்புக் குழுவினருடன் வர மறுத்துவிட்டார். தான் வளர்த்துவரும் 25 நாய்களைத் தனியாக விட்டுவிட்டு என்னால் வரமுடியாது என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார். அவரை சமாதானப்படுத்த எடுத்த முதற்கட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தன. மீட்புக் குழுவினர், அவரது வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, வீடுமுழுவதும் தண்ணீர். கட்டிலின்மேல் துணியால் போர்த்தப்பட்ட நிலையில், நாய்கள் எல்லாம் ஒன்றாக அமர்த்திருந்தன.

அதன்பிறகு, கால்நடை மீட்புக் குழுவினருக்குத் தகவல் அளித்ததும், உடனடியாக அவர்கள் சுனிதா வீட்டுக்கு வந்தனர். அதன்பிறகே, சுனிதா சமாதானம் அடைந்தார். தற்போது சுனிதா,  அவரின் கணவர் மற்றும் அவரின் 25 நாய்களுடன் முகாம்களில் பாதுகாப்பாக உள்ளனர்' என்றார். மீட்புப்பணிகள் அனைத்தும் முடிவடைந்த பிறகு, சுனிதாவுக்காக நிதி திரட்ட உள்ளேன். அந்த நிதியைக் கொண்டு அவர் தனது வீட்டில் நாய் பண்ணை ஒன்றை அமைக்கலாம்'' என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!