``இருக்கான் இடமில்லா.. ஆகாரம் இல்லா.. எல்லாம் போயி..'' - கேரள மக்களின் கண்ணீர் இது! | ''There is no place.. no food.. everything is gone..'' - the tears of Kerala people!

வெளியிடப்பட்ட நேரம்: 19:13 (18/08/2018)

கடைசி தொடர்பு:21:00 (18/08/2018)

``இருக்கான் இடமில்லா.. ஆகாரம் இல்லா.. எல்லாம் போயி..'' - கேரள மக்களின் கண்ணீர் இது!

நீங்கள் நினைப்பதைவிடவும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. மனிதர்கள், அவர்தம் உடைமைகள், கால்நடைகள், இயற்கை வளங்கள் என எல்லாவற்றிலுமே அதிக சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது இந்த வெள்ளம். கிட்டத்தட்ட 20,000 கோடி அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக கேரள அரசு கணக்கிடப்பட்டுள்ளது.

``இருக்கான் இடமில்லா.. ஆகாரம் இல்லா.. எல்லாம் போயி..'' - கேரள மக்களின் கண்ணீர் இது!

கேரள மாநிலம் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு மழையாலும் வெள்ளத்தாலும் மிகக்கொடூரமாகப் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. கேரள வெள்ளத்துக்கு இதுவரை 324 பேர் உயிரிழந்திருப்பதாக கேரள அரசு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். வெள்ள பாதிப்பின் காரணமாக நாளுக்கு நாள் கேரளத்தில் உயிரிழப்பு அதிகரிப்பது வேதனையளிக்கிறது. 

கேரள வெள்ளம்

டெல்லி, ஒடிசா, கர்நாடகம், தெலங்கானா, தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் மற்ற மாநிலங்கள் கேரளத்தின் பாதிப்புகளைச் சரி செய்ய நிவாரணங்களை வழங்கிவருகின்றனர். தமிழகத்தின் வழியாகத்தான் கேரளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உணவுப் பொருள்கள் கொண்டு செல்லமுடியும். ``கேரள வெள்ளத்தில் கட்டப்பனா பகுதியில் பாதிப்பு மிகக் குறைவுதான். பாதிப்புகளில் தப்பிய சில பகுதிகளில் அதுவும் ஒன்று. ஆனால் கட்டப்பனாவுக்குக் கீழே உள்ள இடுக்கி முற்றிலும் துண்டாகி விட்டது. கட்டப்பனா வரை சென்று நிவாரணப் பொருள்களைக் கொடுத்து வருகிறோம்'' என்கிறார் நிவாரணப் பணியில் ஈடுபட்டிருக்கும் தோழர் ஒருவர். தமிழகத்திலிருந்து இரண்டு வழியாகக் கேரளாவுக்கு நிவாரணப் பொருள்கள் கொண்டு செல்லப்படுகின்றன. அதில் ஒன்று கம்பம் மெட்டு வழி மற்றொன்று கோத்தகிரி வழியாகக் கல்பெட்டா சென்றடைவது. பெரும்பாலான நிவாரணப் பொருள்கள் இந்த இரண்டு வழியாகத்தான் கேரளாவுக்குச் சென்றடைகின்றன.

கேரளாவில் உள்ள பல சாலைகள் நிலச்சரிவில் சிக்கியிருப்பதால், மீட்புப் பணிகளிலும் நிவாரணம் கொண்டு செல்வதிலும் சிறிது சுணக்கம் ஏற்பட்டிருக்கிறது. தரை வழியாகச் செல்ல முடியாத இடங்களில் உள்ள மக்களை மீட்பதற்கு மேலும் சில ஹெலிகாப்டர்களைக் கேட்டிருக்கிறது கேரள அரசு. மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியிருக்கிற இந்த வெள்ளத்தில் 2,23,139 பேர் 1,500-க்கும் அதிகமான முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள், எந்தவித உடைமைகளையும் தங்களோடு எடுத்து வரவில்லை. அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசும் தன்னார்வலர்களும் செய்து வருகின்றனர் .இன்று மழையின் அளவு சற்றே குறைந்துள்ள நிலையில், கல்பெட்டா, வயநாடு, பாலக்காடு போன்ற பகுதிகளில் வெள்ள நீர் படிப்படியாகக் குறைந்து வருகின்றது. 

கேரளா வெள்ளம்

நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்களின் வீடுகளைத் தேடிச் சென்று பார்த்து வருகின்றனர். ``கேரள வெள்ளத்தின் கொடூரம் மக்களை நிலைகுலையச் செய்துவிட்டது. இதுவரை தாங்கள் வாழ்ந்த வீட்டின் சுவடு கூட இல்லாததைக் கண்டு செய்வதறியாது திகைத்து நிற்கிறார்கள்'' என்கிறார் பாலக்காட்டில் இருக்கும் நண்பர் ஒருவர். ``மழையில வீடு போயி... இருக்கான் இடம் இல்லா... ஆகாரம் இல்லா... எல்லாம் போயி.. சேர்த்து வைத்த மொத்தமும் போயி..'' என்று கண்ணீருடன் பேசுகிறார் பாலக்காட்டைச் சேர்ந்த பாஞ்சாலி. சிறுகச் சிறுக சேர்த்துவைத்து, வாங்கிய பொருள்கள் எல்லாம் மொத்தமாக இந்த வெள்ளத்தில் இழந்து நிற்கும் பாஞ்சாலிக்கு அங்கிருக்கும் யாராலும் ஆறுதல் சொல்ல முடியவில்லை. நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் பாஞ்சாலியும் அவரது மொத்தக் குடும்பமும் இன்று வீடு இல்லாமல் நிர்க்கதியாய் இருக்கிறார்கள். வெள்ள நீர் திடீரென அதிகரித்ததால் மாற்று உடை கூட எடுத்துச் செல்ல முடியாத அளவுக்கு வெள்ளத்தின் நிலை இருந்திருக்கிறது. முகாம்களில் கொடுத்த உடைகளைத்தாம் இப்போது உடுத்தியிருக்கிறார்கள். அங்கே கொடுக்கும் ரொட்டித்துண்டுகளைக் கூட சாப்பிட மனமில்லாமல், இனி என்ன செய்யப்போகிறோம் என்ற நினைப்பிலேயே ஒவ்வொரு நிமிடத்தையும் கடத்தி வருகிறார்கள்.

வெள்ள பாதிப்பு அந்தளவுக்கா மோசம் என்று கேள்வி கேட்டீர்களானால்.. நீங்கள் நினைப்பதைவிடவும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. மனிதர்கள், அவர்தம் உடைமைகள், கால்நடைகள், இயற்கை வளங்கள் என எல்லாவற்றிலுமே அதிக சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது இந்த வெள்ளம். கிட்டத்தட்ட ரூ. 20,000 கோடி அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாகக் கேரள அரசு கணக்கிடப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசிடமிருந்து இடைக்கால நிதியாக ரூ. 2,000 கோடி கேட்டிருந்தார் பினராயி விஜயன். வெறும் பணத்தைக் கொண்டு மட்டும் இந்த இழப்புகளைச் சரி செய்துவிட முடியாது. கேரளத்துக்கான நமது அன்புதான் இந்தப் பேரிடரிலிருந்து அவர்களை மீட்டுக்கொண்டுவரும். கேரளத்துக்காகக் கரம் கொடுப்போம்!


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close